14 வயதில் நீ என்ன பண்ண? உன்னை பத்தி எனக்கு எல்லாம் தெரியும் - தவெக விஜயை விமர்சித்து பேசிய போஸ் வெங்கட்

By subhashini · 3/4/2025

தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து நடிகரும், திமுக உறுப்பினருமான போஸ் வெங்கட் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய போஸ் வெங்கட், ஸ்டாலின் ரொம்பவே கடின உழைப்பாளி. 14 வயதில் இருந்து அவர் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். கோபாலபுரத்தில் திமுக இளைஞரணி என்ற அணி அமைப்பை தொடங்கினார். பெரியாருடன் ரொம்ப நெருக்கமாக இருந்தார்.

எம்ஜிஆர் உடனும் நெருக்கமாக இருந்தார். அண்ணாவை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். 14 வயதில் இருந்து உழைத்தவரை பார்த்து தற்போது நான் உனக்கு போட்டி? யார் அவர்? 14 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். அந்த வயதில் உங்கள் தந்தையின் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். 16 வயதில் எப்படி கதாநாயகனாக வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பீர். 20 வயதில் நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருப்பீர்கள் என்றும் எனக்கு தெரியும்.

போஸ் வெங்கட் பேச்சு:

காரணம், நானும் அந்த துறையில் இருந்து தான் வந்திருக்கிறேன். தற்போது 50 வயதில் வந்து திமுக தான் எனக்கு போட்டி என்று சொல்கிறீர்கள். அது எந்த வகையில் அர்த்தம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொன்னபோது ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தது. காரணம் ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினார்கள். அவரின் பெயரை சொன்ன திரு. ஜோசப் விஜய் அவர்களே இது ரொம்பவே தவறு.

https://www.youtube.com/watch?v=3b54Qanot0I

விஜய் பற்றிய விமர்சனம்:

20 வயதில் இருந்து 50 வரை நீங்கள் செய்து கொண்டிருந்த வேலை நடித்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்கள். வாரிசு அரசியல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் யாருடைய வாரிசு? உங்கள் தாத்தா சினிமாக்காரர், அப்பா சினிமாக்காரர், அம்மா சினிமாக்காரர், மாமா சினிமாக்காரர். அப்போது நீங்கள்தான் சினிமா வாரிசு. உங்கள் 14 வயதில் உங்க அப்பா திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலின் 14 வயதில் தன்னுடைய தாத்தா இந்திரா காந்தியுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவர்.

விஜய் அரசியல் பற்றி சொன்னது:

அதேபோல் விஜய் நல்ல நடிகர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும், மாற்று கருத்தும் கிடையாது. இந்த கூட்டத்தில் இருப்பவர்கள் கூட விஜய் ரசிகர்கள் தான். அனைவருமே விஜய் ரசிகர்கள் தான். நானே கூட விஜய் ரசிகர் தான். ஆனால், எத்தனை முறையோ சொல்லி இருக்கிறேன். இந்த மேடையில் வைத்துக்கொண்டே உங்களை பாராட்டுகிறேன் ஜோசப் விஜய். நீங்கள் திறமையான நடிகர் தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அரசியலில் நீங்கள் ஜீரோ. அதை எப்போதும் உங்கள் மனதில் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார்.

விஜய் அரசியல்:

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இவர் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்திருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full