தயாரிப்பாளர் செய்த வேலையால் படப்பிடிப்பை ரத்து செய்த விஜயகாந்த் - காரணம் தெரியுமா?
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் செய்த செயலால் படப்பிடிப்பையே ரத்து செய்ய முடிவு செய்த தகவல்தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. மக்கள் மத்தியில் கேப்டன் என்ற பட்டத்தோடு என்றென்றும் மறக்க முடியாத ஒரு நபராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். புரட்சிக் கலைஞர் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நலக்குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார்.
ஆனால், அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தையும் மற்றும் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் செய்த செயலால் விஜயகாந்த் படத்திலிருந்து விலக நினைத்த செய்தி தற்போது மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது.
காஜா மைதீன் செய்த வேலை:
அதாவது விஜயகாந்த் நடிப்பில் வாஞ்சிநாதன் மற்றும் பேரரசு என இரண்டு படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காஜா மைதீன். 90 காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் யாரும் கேரவன் பயன்படுத்தாத நிலையில், 2000 ஆம் ஆண்டுதான் சினிமாவில் கேரவன் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது விஜயகாந்தை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர் காஜா மைதீன், ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு அதிக வாடகை உடைய கேரவன் ஒன்றை எடுத்து வந்து நிறுத்தியுள்ளார்.
கோபப்பட்ட கேப்டன்:
மேலும் விஜயகாந்த் படப்பிடிப்பிற்கு வந்தவுடன், கேப்டன் நீங்கள் கேரவனில் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்ல, 'கேரவனா அது எதற்கு' என்று விஜயகாந்த் கேட்டுள்ளார். நீங்கள் மேக்கப் போடுவதற்கும், ரெஸ்ட் எடுப்பதற்கும் என்று காஜா மைதீன் கூற, கேப்டன் உடனே தனது உதவியாளரை அழைத்து, 'இன்னைக்கு ஷூட்டிங் இல்ல பேக் அப் பண்ணிடுங்க' என்று உத்தரவிட்டுள்ளார். இதை கேட்ட தயாரிப்பாளர் காஜா மைதீன் அதிர்ந்து போய் உள்ளார்.
கேப்டன் கோபத்தின் காரணம்:
உடனே என்ன கேப்டன் என்ன ஆச்சு அப்படின்னு தயாரிப்பாளர் கேட்க, 'நான் இங்க வேலைக்கு வந்து இருக்கிறேனா, இல்ல ரெஸ்ட் எடுக்க வந்திருக்கிறேனா'. இந்த கேரவன் இங்கு இருந்தால் இன்னைக்கு ஷூட்டிங் கிடையாது. நான் இங்கு இருக்கணுமா இல்ல கேரவன் இருக்கணுமானு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்று கூறியுள்ளார் கேப்டன். விஜயகாந்தின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் காஜா மைதீன், உடனடியாக அந்த கேரவனை ஸ்டுடியோவிற்கு வெளியே நிறுத்தி உள்ளார். அதன் பிறகு தான் படப்பிடிப்பு தொடங்கியதாம்.
விஜயகாந்த் குறித்து:
கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் மறைந்த நிலையில், தற்போது அவரின் உருவத்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் சில படங்களில் பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கேப்டனின் மனைவி பிரேமலதா, கேப்டனின் உருவத்தை படங்களில் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும் என்ற அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதனைத் தொடர்ந்து கேப்டனின் உருவப்படங்களை பயன்படுத்திய படங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று பேசப்படுகிறது.