தமிழக அரசு அறிவித்து இருக்கும் விருது நியாயமானதா? கைதி பட நடிகை மோனிகாவின் ஆதங்கம்

By subhashini · 1/2/2026

சமூக சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் படங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறந்த தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல பிரிவுகளில் சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் ஆகியவற்றை அறிவித்திருக்கிறது. இந்த நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் துவக்கி வழங்குகிறார். மேலும், விருது அறிவிக்கப்பட்டவர்களில் பலர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், சிலர் விருது நியாயமான முறையில் அறிவிக்கப்படவில்லை என்று தமிழக அரசை விமர்சித்தும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு விருது:

இந்நிலையில் கனா, கைதி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மோனிகா. இவருக்கு விருது வழங்கப்படாததால் இது தொடர்பாக மோனிகா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்தேன். ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன.

மோனிகா அறிக்கை:

சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன. மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் என்னால் இயன்ற சிறந்த முயற்சியையும் நான் வழங்கியுள்ளேன். 'கைதி', 'ராட்சசன்', 'கனா', 'ஆண் தேவதை', 'சங்குசக்கரம்' போன்ற திரைப்படங்களில் பிரதானமும் முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இருப்பினும், தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அத்தகைய அங்கீகாரத்தை அளிக்கும் அளவிற்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. இந்த விஷயத்தை நான் எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக முன்வைக்கவில்லை.

விருது பற்றிய விமர்சனம்:

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை என்றால், இதைப் பற்றி பேச வேண்டும் என்று நான் எண்ணியிருப்பேனா என்பது எனக்கே தெரியாது. அந்தக் காலகட்டத்தில் என்னைப் போலவே பல குழந்தை நடிகர்கள் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர். அவர்களில் யாருக்காவது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால், அது தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டதாக நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், தற்போதைய நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக, இது தனிநபர்கள் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் விருது அன்று. யாரோ ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது செல்வாக்கினாலோ வழங்கப்படும் விருதாகவும் இல்லை.

View this post on Instagram

A post shared by monekha siva (@monicasiva_offl)

இது அரசால் வழங்கப்படும் மாநில விருது. உண்மையான திறமையைப் பாராட்டும், ஒவ்வொரு நடிகருக்கும் மிக முக்கியமான ஒரு பெருமைமிக்க அங்கீகாரம். அந்த அங்கீகாரம் பெற வேண்டியவர்களுக்குக் கிடைக்காமல் போகும்போது, அது மனதிற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்த விஷயத்தைக் கேள்வி எழுப்பிப் பேசுவது என் உரிமை என்றே நான் கருதுகிறேன். இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்போது, விருதுகளின் மீது உள்ள நம்பிக்கையும் மதிப்பும் மெதுவாகக் குறைந்துவிடுகிறது. இந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் இத்துறை சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்வுக்குழுவினர் கவனத்தில் கொண்டு, உரிய முறையில் பரிசீலிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

behindtalkies AMP · Quick view
View full