'திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை'... த.வெ.க எம்எல்ஏ பேரம் விவகாரத்தில் பெ.சண்முகம் கடும் குற்றச்சாட்டு!
'எம்எல்ஏக்களை கோடிக்கணக்கில் விலை பேசுவது ஏற்க முடியாது'... திமுக மீது மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் குற்றச்சாட்டு!
எம்எல்ஏ பேரம் விவகாரம் குறித்து பெ.சண்முகம் கருத்து
த.வெ.க எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி மாறுவது ஜனநாயகத்தில் நடக்கும் இயல்பான நிகழ்வு என்றாலும், பணம் கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
'கட்சி மாறுவது வேறு... விலை பேசுவது வேறு'
இதுகுறித்து பேசிய பெ.சண்முகம், "சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேர்வது என்பது தமிழ்நாட்டில் புதிதான விஷயம் அல்ல. ஆளும் கட்சி மாறும்போது பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் வேறு கட்சிகளுக்கு மாறிய நிகழ்வுகள் ஏராளமாக நடந்துள்ளன. ஒருவர் தனது விருப்பத்தின் பேரில் கட்சி மாறுவது ஒரு விஷயம். ஆனால், ஒருவரை கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து விலை பேசி வாங்க முயற்சிப்பது முற்றிலும் வேறுபட்டது. அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.
'ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடந்திருக்கிறது'
தொடர்ந்து பேசிய அவர், "ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை. எப்படியாவது தற்போதைய ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த முயற்சிகள் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றன" என்று குற்றம்சாட்டினார்.
'ஸ்டாலின் பேச்சின் பின்னணி இப்போதுதான் புரிகிறது'
மேலும், "சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும் என்று கூறியிருந்தார். அந்த பேச்சின் பின்னணி என்னவென்று தற்போது வெளியாகியுள்ள தகவல்களைப் பார்த்த பிறகுதான் புரிகிறது. அதற்கான தீவிரமான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததன் வெளிப்பாடாகத்தான் சட்டமன்ற உறுப்பினரை விலை பேசியதாக வெளியாகியுள்ள செய்தியை பார்க்க வேண்டியுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியலில் புதிய விவாதம்
பெ.சண்முகத்தின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. த.வெ.க எம்எல்ஏ பேரம் விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை எந்த திசையில் செல்கிறது, அடுத்தகட்டமாக என்ன தகவல்கள் வெளியாகின்றன என்பதையே அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.