நடிகர் ரவி மோகன் படத்தின் தலைப்புக்கு வந்த சிக்கல் - டெல்லி நீதிமன்றம் போட்ட உத்தரவு, நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் காதலிக்க நேரமில்லை. இந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதை அடுத்து இவர் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ரவி அவர்கள் ஜீனி, கராத்தே பாபு போன்ற படங்களில்நடிக்கிறார். அதோடு ரவி மோகன் அவர்கள் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் தான் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தார். இதில் இவர், யோகி பாபுவை வைத்து `An Ordinary Man' என்ற படத்தை இயக்குவதாக அறிவித்து இருந்தார். மேலும், இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் 'ப்ரோ கோட் (BRO CODE)' என்ற படத்தில் ரவி நடிப்பதோடு தயாரிக்கிறார். அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், யோகி பாபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா உட்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பெயரை மாற்ற சொல்லி பிரபல மதுபான நிறுவனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ப்ரோ கோட் படம் சர்ச்சை:
அதாவது, ப்ரோ கோட் என்ற பெயரில் பல ஆண்டு காலமாகவே இன்டோ-ஸ்பிரிட் பீவரேஜஸ் (Indospirit Beverages Pvt Ltd) என்ற நிறுவனம் மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதனால் இந்த நிறுவனம், ப்ரோ கோட் என்ற பெயரை படத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். அப்போது ரவி மோகனுக்கு சாதமாக தான் தீர்ப்பும் கிடைத்தது. இதை அடுத்து மதுபான நிறுவனம் இந்த விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. பின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
மதுபான நிறுவனம் வழக்கு:
அப்போது மதுபான நிறுவனம், 2015 டிசம்பரில் ப்ரோ கோட் என்ற வர்த்தக முத்திரையின் கீழ் எங்களுடைய முதன்மை தயாரிப்பைக் கொண்டு வந்தோம். எங்களுடைய இந்த தயாரிப்பு வணிக ரீதியாக எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தில் இந்த பெயரை பயன்படுத்துவது வர்த்தக முத்திரை மீறல். இது எங்களுடைய பிராண்ட் மீதான நற்பெயரை பாதிக்கும் என்று கூறியிருந்தார்கள். இதை அடுத்து ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் சார்பில், வர்த்தக முத்திரை சட்டத்தின் 41-ம் வகுப்பின் கீழ் மதுபான நிறுவனம் கூறும் வர்த்தக முத்திரைக்கு எந்த பதிவு இல்லை. மதுபான நிறுவனத்தின் விண்ணப்பம் வர்த்தக முத்திரைகள் பதிவேட்டில் நிலுவையில் இருக்கிறது என்று கூறி இருந்தார்கள்.
நீதிமன்றம் உத்தரவு:
பின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மதுபான நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் படத்தில் அவர்களின் முத்திரை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக வழக்கு போடப்பட்டிருக்கிறது. இது மீறலுக்கு சமம். இது மனுதாரருடைய நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் நுகர்வோர் இடம் மனுதாரர் பெற்றிருக்கும் நம்பிக்கை மற்றும் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க வழிவகிக்கும். இதனால் ப்ரோ கோட் என்ற பெயரை பயன்படுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு நான்கு வாரங்களுக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இந்த வழக்கை டிசம்பர் 23ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.