AI மூலம் கிளைமாக்ஸ் மாற்றம் அப்செட்டில் நடிகர் தனுஷ் கோபத்துடன் வெளியிட்ட அறிக்கை - என்ன தெரியுமா?

By subhashini · 4/8/2025

ஏ ஐ மூலம் ராஞ்சனா படம் மாற்றப்பட்டு ரிலீஸ் ஆனதற்கு எதிராக நடிகர் தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ராஞ்சனா. இந்த படத்தை ஹிமாஷு சர்மா எழுதி ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். இந்த படம் மூலம் தான் தனுஷ் இந்தியில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.

ராஞ்சனா பட சர்ச்சை:

தேரே இஸ்க் மெயின் என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படம் வருகிற நவம்பர் மாதம் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
மேலும், ராஞ்சனா படத்தின் உடைய இரண்டாம் பாகம் ரிலீசாக இருப்பதால் முதல் பாகத்தை கடந்த ஆகஸ்ட் 1ம் ரீ ரிலீஸ் செய்திருக்கின்றனர். அதை விளம்பரப்படுத்தும் போது ஏஐ மூலம் புது கிளைமாக்ஸ் உடன் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதாக கூறியிருந்தார்கள்.

தனுஷ் அறிக்கை:

இதனை பார்க்க ரசிகர்களும் ஆர்வம் காட்டியிருந்தார்கள். ஆனால், அந்த ஏஐ கிளைமாக்ஸுக்கு நடிகர் தனுஷ் கோபப்பட்டு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் தனுஷ் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிடுகிறார். அதில் அவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் இது கிடையாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலை படைப்புகளில் மாற்றங்களை செய்வது கவலையளிக்கிறது. இது சினிமாவின் பாரம்பரியத்திற்கும் நேர்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

தனுஷ் சொன்ன விஷயம்:

இதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார். மேலும், உண்மையான படத்தினுடைய கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் உடைய கதாபாத்திரம் இறந்து விடுவது போல் இருக்கும். ஆனால், மறு வெளியீட்டில் அவர் மருத்துவமனையில் கண்விழிப்பது போல காண்பிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனுஷ் உடைய இந்த பதிவுதான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தனுஷ் திரைப்பயணம்:

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குபேரா. இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது தனுஷ் இட்லி கடை என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full