தனுஷின் 'இட்லி கடை' சுவைத்ததா? இல்லையா? படம் எப்படி இருக்கு - முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரன், பார்த்திபன், சமுத்திரகனி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
தனுஷின் தந்தை ராஜ்கிரன் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து ஒரு கிராமத்தில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் காலையில் எழுந்து ராஜ்கிரண் கோயிலுக்கு சென்று ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மி கல்லில் சட்னி அரைத்து ஒரு சிறிய கூரை வீட்டில் தான் தன்னுடைய இட்லி கடையை நடத்தி வருகிறார். அந்த ஊருடைய அடையாளமாகவே ராஜ்கிரன் இட்லி கடை தான் இருக்கிறது. தன் அப்பாவின் இட்லி கடையை பெருசாக மாற்ற தனுஷ் நினைக்கிறார். ஆனால், ராஜ்கிரன் எல்லா இடத்திலும் நானே சமைக்க முடியுமா? என்று சொல்கிறார்.
அதோடு தனுஷ் குண்டு செட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது என்று நினைத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்புகிறார். வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பெரிய நிறுவனராக சத்யராஜ் இருக்கிறார். அவருடைய நிறுவனத்தில் ஒரு பெரிய பொறுப்புக்கு தனுஷ் செல்கிறார். அதற்குப்பின் சத்யராஜின் மகளை தனுஷ் கல்யாணம் செய்ய நினைக்கிறார். சத்யராஜின் மகன் தான் அருண் விஜய். அவருக்கு தன் தங்கையை தனுஷுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதில் விருப்பமே இல்லை.
அப்போதுதான் தன்னுடைய தந்தை இறந்த செய்தி தனுஷுக்கு தெரிகிறது. அதைக் கேட்டவுடன் திரும்பவும் தனுஷ் தன்னுடைய சொந்த ஊருக்கே வருகிறார். தனுஷ், சத்யராஜின் மகளை திருமணம் செய்து கொண்டாரா? தன்னுடைய அப்பா நேசித்த இட்லி கடையை தனுஷ் எடுத்து நடத்தினாரா? தனுசுக்கும் அருண் விஜய்க்கும் இடையே என்ன பகை? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் தனுஷ் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார்.
வழக்கமான ஆக்ஷனில் இறங்காமல் அகிம்சையில் இறங்கி இருக்கிறார் தனுஷ். இவர் ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். இவரை அடுத்து படத்தில் வரும் ராஜ்கிரன், சத்யராஜ் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஒரு பிரச்சனைக்கு தீர்வு சண்டை கிடையாது, அகிம்சை தான் என்றும் சொல்லும் விஷயம் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதையை நேர்த்தியாக இயக்குனர் தனுஷ் கொண்டு சென்றிருக்கிறார்.
https://youtu.be/sXbt22zwKHk?si=AvODASVpsFnuYlHF
அதோடு படம் ரொம்ப எமோஷனல் ஆகவும் இருக்கிறது. இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. கொஞ்சம் எமோஷனலாக இருந்தாலும் படத்தை சிறப்பாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக வடிவமைத்திருக்கிறார்.
மேலும், இந்த படத்தில் பார்த்திபன் கேமியா ரோலில் வந்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரகனி எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு பெரிய பக்க பலமே ஜிவி பிரகாஷ் உடைய இசை தான். பாடல்களும் பின்னணி இசை இரண்டுமே பட்டையை கிளப்பியிருக்கிறது. அதே போல் படத்தினுடைய ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. டெக்னிக்கலாக படத்தில் எந்த குறையும் இல்லை. மொத்தத்தில் எல்லோரும் சென்று கொண்டாடும் படமாக தான் இட்லி கடை இருக்கிறது.
நிறை:
தனுஷ், அருண் விஜய், ராஜ்கிரண் நடிப்பு அற்புதம்
கதைக்களம் நன்றாக இருக்கிறது
எமோஷனல் காட்சிகள் தூள்
பாடல்கள் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்
டெக்னிக்கலாக படத்தில் எந்த குறையும் இல்லை
கிளைமேக்ஸ் காட்சிகள் நன்றாக இருக்கிறது
குறை:
இந்த படத்தை கிராமத்து சாயலில் இயக்குனர் கொடுத்து இருக்கிறார். சிட்டி காட்சிகள் தான் சீக்கிரமாக பார்வையாளர்களை கவர தடுமாறுகிறது.
எமோஷனல் காட்சிகள்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
இருந்தாலும் அது பெரிதாக மைனஸ் இல்லை
மொத்தத்தில் இட்லி கடை - சுவை ருசியாக இருக்கிறது