மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் மூலம் ஒன்று சேர்ந்த சூர்யா - அமீர் நட்பு - எக்ஸ்குளுசிவ் தகவல்
சமீப காலமாகவே முன்னணி நடிகர்களின் படங்களை ரீ-ரிலீஸ் செய்வதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜயின் கில்லி, ரஜினியின் படையப்பா, அஜித்தின் மங்காத்தா போன்ற படங்களெல்லாம் ரீ-ரிலீஸ் செய்தும் மிக அளவில் வசூல் செய்திருந்தது. அந்த வகையில் தற்போது திரிஷா- சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படம் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது.
இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் தான் மௌனம் பேசியதே. இந்த படத்தில் சூர்யா, திரிஷா, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பே மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் பற்றி சூர்யா, லைலா, திரிஷா பேசிய வீடியோ எல்லாம் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மௌனம் பேசியதே ரீ ரிலீஸ்:
மேலும், இது தொடர்பாக மௌனம் பேசியதே படத்தின் இயக்குனர் அமீர் அளித்த பேட்டியில், இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சூர்யா என்னுடைய நெருங்கிய நண்பர். நான் உதவி இயக்குனராக அறிமுகமான கட்டத்தில் அவரும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் நிறைய பேசிக் கொண்டே இருப்போம். நான் அவரை அவ்வளவு ரசிப்பேன். அவரை லவ் பண்ணுனேன் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். எங்க போனாலும் என்னைத்தான் கூப்பிடுவார். நானும் அவரை தான் கூப்பிடுவேன். அந்த காலகட்டம் ரொம்ப ஜாலியாக இருந்தது.
அமீர் பேட்டி:
அதற்குப் பிறகு படம் வெளியான நாள் நான் மதுரையில் இருந்தேன். இரவு படம் பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் பண்ணினார். படம் நல்லா இருக்கு மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று சந்தோசமாக சொன்னார். நான் அப்படியா என்று சாதாரணமாக கேட்டேன் நான் உற்சாகமாக பேசுவேன் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், நான் அப்படி பேசவில்லை. ஒரு சின்ன விஷயமே அவருக்கு கொஞ்சம் ஹர்ட் ஆன மாதிரி இருந்தது. அந்த சம்பவம் மட்டும்தான் பிரச்சனைக்கு காரணம் இல்லை. காலபோக்கில் இருவருக்குள்ளும் ஒரு சின்ன இடைவெளி உருவாகிவிட்டது.
அமீர்-சூர்யா நட்பு:
அவரை நான் ஹீரோவாக பார்த்ததே இல்லை, நண்பனாக தான் பார்த்தேன். நேரில் சந்தித்தால் வாங்க ஜி என்று தான் பேசுவோம். நான் யாரிடமிருந்து விலகுகிறேன் என்றால் அது அவர்கள் மீது தப்பினால் கிடையாது. அது என் தப்பாகத் தான் இருக்கும். அதை உணர்ந்த பிறகு தான் நான் விலகுகிறேன். சூர்யாவிடம் இருந்து விலகினதும் அப்படித்தான் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் மௌனம் பேசியதே ரீ ரிலீஸ்க்கு சூர்யா-அமீர் இருவரும் சந்தித்து கொண்டார்கள். பல வருடங்களுக்கு பின் இருவரும் சந்தித்து கொண்டதால் நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.