கடந்த ஆண்டு ஒரே நாளில் இரண்டு இழப்பு, தற்போது படம் ரிலீஸ் ஆன அதே நாளில் தாய் இழப்பு - போஸ் வெங்கட் வீட்டில் தொடரும் சோகம்
இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் நிகழ்ந்திருக்கும் துக்க சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திமுக தலைமை கழக பேச்சாளர் ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்து தற்போது வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.
போஸ் வெங்கட் குறித்து :
இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் தான் நடித்து இருக்கிறார். பின் இவர் 2020ஆம் ஆண்டு வெளிவந்த கன்னிமாடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருந்தார். போஸ் வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படத்தின் கதை. இதை அடுத்து தற்போது போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் சார்.
சார் படம்:
இது இவருடைய இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் விமல், சாயா தேவி, பருத்திவீரன் சரவணன், ரமா, சிராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. கல்வியை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் போஸ் வெங்கட் வீட்டில் ஒரு துக்க சம்பவம் நிகழ்ந்திருக்கும் தகவல் தான் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
தாய் மரணம்:
அதாவது, சார் படம் வெளியான நேற்று போஸ் வெங்கட்டின் உடைய அம்மா ராஜமணி மாலை 5 மணிக்கு காலமாகி இருக்கிறார். இவருக்கு தற்போது 83 வயது. உடல்நல குறைவால் தான் இவர் இறந்தார். இவருடைய இறப்பிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இன்று இவருடைய சொந்த ஊரான அறந்தாங்கியில் இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. போஸ் வெங்கட் அம்மாவின் மறைவிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
சோகத்தில் போஸ் வெங்கட் குடும்பம் :
அதோடு படம் வெளியாகி ஒரு நாள் கூட முழுவதும் முடியாத நிலையில் போஸ் வெங்கட்டிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த துயரத்திற்கு பலருமே ஆறுதல் கூறி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த ஆண்டு போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு இறப்புகள் நேர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி காலமாகி இருந்தார். இதனால் போஸ் வெங்கட்டின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். வளர்மதி இறந்த அடுத்த சில மணி நேரத்திலேயே அவரது சகோதரர் ரங்க நாதனும் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.