விக்னேஷ் சிவனுக்கு நன்றி, வாய்ப்பை அறிவித்த அந்த இரவு - மகிழ் திருமேனி சொன்ன விஷயம்

By subhashini · 29/1/2025

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் சிங்களான ‘சவதீகா’ பாடல் படத்தின் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. அறிவு எழுதி இருக்கும் இப்பாடலை பாடகர் ஆண்டனிதாசன் பாடியிருந்தார்.

விடாமுயற்சி படம்:

இந்தப் பாடல் வெளிநாட்டுகளில் படமாக்கப்பட்டதாகும். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது. தற்போது இப்படம் வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை.

மகிழ்திருமேனி பேட்டி:

அவர்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ண முடியவில்லை. அதற்கு பிறகு அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால், அந்த படத்தை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதோடு இந்த இடத்தில் நான் விக்னேஷ் சிவனுக்கு தான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். காரணம், நான் விக்னேஷ் சிவனை இரண்டு மூன்று முறை தான் சந்தித்து இருக்கிறேன். அவர் ரொம்ப நல்ல பையன். அவர் அந்த படத்தில் இருந்து விலகிய பிறகுமே என்னை பற்றி மீடியாவில் ரொம்ப அழகாக பேசியிருந்தார். சுரேஷ் சந்திரா, நானும் கிட்டத்தட்ட பல வருடங்களாக பழகி வருகிறோம்.

பட வாய்ப்பு குறித்து சொன்னது:

ஒருமுறை கூட அவரிடம் நான், அஜித் சார் பட வாய்ப்பு வாங்கி கொடுங்கள் என்று கேட்டதே கிடையாது. நாம் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கான தகுதியை முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன். அப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் சுரேஷ் சந்திராவிடம் இருந்து எனக்கு போன் கால் வந்தது. அவர் என்னிடம், அஜித்தின் அடுத்த படத்தை நீங்கள் தான் இயக்குகிறீர்கள். அடுத்த வாரம் நீங்கள் லண்டனுக்கு கிளம்ப வேண்டும். அஜித் சார் உங்களை அழைப்பார் என்று சொன்னார். அதைத்தொடர்ந்து அஜித் சாரிடம் இருந்து போன் வந்தது.

அஜித் பற்றி சொன்னது:

அவர் என்னிடம் சொன்ன வார்த்தை, மகிழ் என்னை கண்மூடித்தனமாக நம்புங்கள் என்றார்.
அந்த நாள் எனக்கு இரவு தூக்கமே வரவில்லை. அந்த வாய்ப்பை நினைத்து நான் சந்தோஷப்பட்டு கொண்டே இருந்தேன். அதற்குப்பின் படம் தொடர்பாக லண்டனுக்கு போனேன். அங்கு அஜித் சார் வந்தார். அப்போது தான் அஜித் சாரை நான் முதன்முறையாக சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் அவர் மகிழ் என்று கட்டிப்பிடித்தார். ரொம்ப நாட்களாக பழகிய ஒரு நபர் போல அவர் என்னிடம் பேசி இருந்தார். அவர் அதை வேண்டும் என்று செய்யவில்லை. அவருடைய இயல்பே அப்படித்தான். அன்றிலிருந்து எனக்கும் அவருக்கும் நட்பு தொடங்கியது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full