சொந்த வீடு இல்லைன்னு என் மனைவி ரொம்ப வருத்தப்பட்டார் - '3BHK' பட விழாவில் மாரி செல்வராஜ் எமோஷனல்
3BHK பட விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த் நடித்து இருந்தார்.
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. சங்கர் திரைப்பயணதிலேயே இந்த படம் பெரும் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. அதன் பின் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த மிஸ் யூ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து கடைசியாக சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த படம் டெஸ்ட். சசிகாந்த் தான் டெஸ்ட் படத்தையும் இயக்கியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா, மாதவன், மீரா ஜாஸ்மின் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 3BHK.
3BHK படம்:
இந்த படத்தை எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜூலை நான்காம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அருண் விஷ்வா தயாரித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினருடன் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
விழாவில் மாரி செல்வராஜ்:
அப்போது விழாவில் பேசிய மாரி செல்வராஜ், ராம் சாருடைய இயக்கத்தில் சித்தார் சாரோட நடிப்பில் ஒரு படம் பண்ணலாம் என்று இருந்தோம். சித்தார்த் பாடி கொடுத்த பத்து பாடல்கள் கூட ரெடியாகிவிட்டது. அந்த படத்துக்காக நல்ல இடங்கள் பார்ப்பதற்காக நானும் ராம் சாரும் ஊட்டி மலையோடு மூலை முடுக்கெல்லாம் சுத்தினோம். மலை உச்சியில் ஒரு பள்ளத்தாக்கு பார்ப்பதற்காக போனோம். அந்த பள்ளத்தாக்கை பார்க்க மலை உச்சியில் பல மணி காத்திருந்தோம். ஆனால், அந்த பள்ளத்தாக்கு பார்க்கவே முடியவில்லை. கடைசியில் திரும்பி தான் வந்தோம். அந்த படத்தையும் பண்ண முடியாமல் போனது. ஒரு நாள் அந்த படம் நடக்கும் என்று நம்புகிறேன்.
https://www.youtube.com/watch?app=desktop&v=h2Ec6k-mHlE
மனைவி பற்றி சொன்னது:
இந்த படத்தை பார்த்து என்னுடைய மனைவி அழுதுவிட்டார்கள். நான் பிறக்கும்போது எனக்கு சொந்தமாக ஒரு ஓட்டு வீடு இருந்தது. ஆனால், என் மனைவி பிறக்கும்போது அவர்களுக்கு சொந்த வீடு கூட கிடையாது. நாங்கள் காதலிக்கும் போது நிறைய வீட்டை மாற்றி இருக்கும். ஒரு பையன் அடிக்கடி வருவான். அதனாலே ஓனர் காலி பண்ண சொல்லிட்டாங்க சொல்லுவாங்க. நான் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போனதால் தான் பலமுறை அவங்க வீட்டை காலி பண்ணாங்க. அப்படி பலமுறை அவங்களோட சேர்ந்து வீடு தேடி அலைந்திருக்கிறேன். பரியேறும் பெருமாள் படம் ரிலீசானதுக்கு பிறகு சேலத்தில் வீடு தேடி அலைந்திருக்கிறேன். சென்னைக்கு வந்ததுக்கு பிறகு வீடு தேடி அலைந்திருக்கோம்.
படம் பற்றி சொன்னது:
எனக்கு சொந்தமாக வீடு பற்றிய கவலையில்லை. ஆனால், என் மனைவி சொந்த வீடு இல்லை, சொந்த வீடு இல்லை என்று அடிக்கடி வருத்தப்படுவார்கள். எனக்கு சமூகத்தைப் பற்றிய கனவுதான். அவர்களுக்கு சொந்த வீட்டைப் பற்றிய கனவு. கர்ணன் படம் முடித்துவிட்டு ஒரு சொந்த வீடு வாங்கினோம். 3BHK படம் பார்த்துவிட்டு என் மனைவி ரொம்பவே அழுந்தார்கள். இந்த படத்தில் அம்மா, அப்பா இருக்கிறார்கள். எனக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும் வைத்துக்கொண்டு சொந்த வீடு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு இந்த படம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று எமோஷனலாக கூறியிருக்கிறார்.