'நாடகக் காதல்' செய்து தான் திருமணம் செய்தேன், ஆனால்- தன் மனைவி குறித்து மனம் திறந்த மாரி செல்வராஜ்
நாடகக் காதல் குறித்து மாரி செல்வராஜ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக மாரி செல்வராஜ் திகழ்கிறார். இவர் 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் 'வாழை'. இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர், உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசை அமைத்து இருக்கிறார். ஏற்கனவே மாரி இயக்கத்தில் கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழை படம்:
மேலும், இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் வாழை படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது. இதில் படக்குழுவினர் உடன் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் சந்தோஷ் நாராயணன்- பா. ரஞ்சித் இருவருமே நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டார்கள்.
விழாவில் மாரி செல்வராஜ்:
இந்த விழாவில் மாரி செல்வராஜ், இந்தப் படத்தை என்னுடைய மனைவியான திவ்யா மாரி செல்வராஜ் பெயரில் தான் வெளியிடுகிறேன். நான் ராம் சாரிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, நானும் திவ்யாவும் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்ற படத்தை பார்க்க போயிருந்தோம். அப்போதுதான் தங்கமீன்கள் படமும் வெளியாகியிருந்தது. படம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே ராம் சார் எனக்கு போன் செய்து ஒரு புத்தகம் வேண்டும், அதை உடனே வாங்கி வா என்று சொன்னார். நானும் படத்திலிருந்து வெளியே வந்து அந்த புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு திரையரங்க வாசலில் இருவருமே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
மனைவி குறித்து சொன்னது:
அதேபோல் உதவி இயக்குனராக இருப்பவர்களிடம் ஏதாவது ஒரு படத்திற்கு ஊரிலிருந்து டிக்கெட் கேட்பார்கள். நான் அப்போதெல்லாம் தங்க மீன்கள் மாதிரியான படங்களில் தான் வேலை செய்திருந்தேன். ஆனால், அவர்கள் எந்திரன் மாதிரியான படத்திற்கு டிக்கெட் கேட்பார்கள். இருந்தும் அடித்து பிடித்து அந்த டிக்கெட்டை வாங்கி விடுவேன். திவ்யாவுடைய வீட்டில் இருந்து அனைவருமே ஏதோ ஒரு வகையில் கலைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
நாடக காதல் குறித்து சொன்னது:
அதனாலேயே அவர்களிடம் நான் நெருக்கமாகி விட்டேன். அப்படித்தான் ஒரு படத்தை அவள் பேரில் தயாரிக்க நினைத்தேன். என்னுடைய குழந்தைகளுக்கும், எனக்கு அடுத்து வரக்கூடியவர்களுக்கும் என்னை புரிந்து கொள்ள சரியான வழியாக இருக்கும் என்று நம்புகிறேன். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களிடம் நாடக காதல் என்று சொல்வார்கள். அப்படி பார்த்தால் நாடக காதல் செய்து தான் நான் என்னுடைய மனைவி திருமணம் செய்து கொண்டேன். அவள் பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறேன் என நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.