ஒரு 4, 5 இயக்குனர்கள் இருக்காங்க, அவங்களுக்கு அதே வேலைதான் - 'பேட் கேர்ள்' படத்தை மீண்டும் விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி

By krithika · 5/2/2025

இயக்குனர் மோகன் ஜி, மீண்டும் 'பேட் கேர்ள்' படம் குறித்து விமர்சித்து இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘Teejay’ அருணாச்சலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் டீசர் வெளியான நாள் முதலே, கடும் எதிர்ப்புகள் உருவாகி வருகிறது. இந்தப் படம் இளம் பெண்ணின் காதல், தனிப்பட்ட விருப்பங்களில் அவர்களின் சுதந்திரமான முடிவு எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. இதுவரை திரைக்கு வராத கதைகளை இயக்க வேண்டும் என்ற பெயரில், சில இயக்குனர்கள் கலாச்சார சீரழிவை முன்னிறுத்துவதாக, இந்த டீசரை பார்த்த பின்னர் நெட்டிசன்கள் பலர் தங்களின் ஆதங்கத்தை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் பிராமண சமூகத்தை முன்னிறுத்தி ஏன் இந்த படத்தில் நடிக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டுகளையும் வைத்து வருகிறார்கள்.

பா ரஞ்சித் பாராட்டு:

இதற்கிடையே, இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது எக்ஸ் தளத்தில், ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை பார்க்க நேர்ந்தது, இது உண்மையிலேயே தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம். இப்படியான துணிச்சலான கதையை ஆதரித்ததற்கான பெருமை இயக்குனர் வெற்றிமாறன் அவர்களை சேரும் என்று வாழ்த்தி டீசர் லிங்கை பகிர்ந்திருந்தார். ரஞ்சித்தின் பதிவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மோகன் ஜி, ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த கூட்டத்திற்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம்.

மோகன் ஜி பதிவு:

வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் மற்றும் அவர்களை சார்ந்தோரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும். பிராமண அப்பா அம்மாவை வசைபாடுவது எல்லாம் பழசு, ட்ரெண்டிங் கிடையாது. இது போன்ற படங்களை உங்கள் சொந்த ஜாதிப் பெண்களுடன் முயற்சி செய்து, முதலில் உங்கள் சொந்த குடும்பத்தாரிடம் காட்டவும் என்று காட்டமாக பதிவிட்டுருந்தார்.
தற்போது மீண்டும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் மோகன் ஜி அவர்களிடம், வெற்றிமாறனின் 'பேட் கேர்ள்' படத்தில் பிராமணர்களை தாக்குவதைப் போல் உள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கவில்லை:

அதற்கு பதில் அளித்த மோகன் ஜி, பிராமணர்களை தொடர்ந்து தாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவரை எதிர்ப்புக் குரல் வந்ததே கிடையாது. நான் முதலில் ட்விட்டரில் பதிவு போடும்போது, எனக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. எப்பயுமே பிராமணர்களை திட்டுவார்கள், அதை பிராமணர்களே கேள்வி கேட்க மாட்டார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த தடவை இந்த பிரச்சனையில் ஏதோ எழுச்சி உருவாகி, இன்னைக்கு அது வந்து ஒரு பெரிய புரட்சி மாதிரி மாறி இருக்கிறது.

நான்கு, ஐந்து இயக்குனர்கள் :

இதற்குப் பிறகு பிராமணர்களை எப்போதும் போல திட்டுவது இருக்காது. பிராமணர்களை மட்டுமல்ல, இவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளி மாதிரி காட்ட வேண்டும் என்று நான்கு, ஐந்து இயக்குனர்கள் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். அது நடந்தால் பரவாயில்லை. நடக்காத பிரச்சனைகளில் இவர்களை காட்டினால் கூட அந்த படம் ஓடிடும் என்கிற நினைப்பில் தான் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போ அதுக்கு பெரிய கடிவாளம் வந்திருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆகும் போது, அவங்க எந்த அளவுக்கு அந்த படத்தில் இருக்கும் பிரச்சனையை ஏற்றுக் கொள்கிறார்கள், எந்த அளவுக்கு சரி செய்து கொள்கிறார்கள் என்று தெரியும் என்று பேசியுள்ளார் .

Tamil Behind Talkies AMP · Quick view
View full