விருது அமைப்புகள் நேர்மையாக செயல்பட்டதா? - தமிழக அரசை கேள்வி கேட்கும் இயக்குனர் பா.ரஞ்சித்
தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகளை வாங்கிய பிரபலங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சமூக சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் படங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுக்கு
தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறந்த தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல பிரிவுகளில்
சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்வி ஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவற்றை அறிவித்திருக்கிறது. இந்த நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு அரசு விருது:
இந்த விழாவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் துவக்கி வழங்குகிறார்.
அதோடு இடையில் வழங்கப்படாமல் இருந்த விருதுகள் அனைத்தையுமே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணையிட்டு இருக்கிறார். அதன்படி 2009ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த அனைத்து திரைப்பட விருதுகளும் வழங்கப்படுகிறது. மொத்தம் 183 திரைத்துறை சார்ந்த விருதுகளும், 101 சின்னத்திரை சார்ந்த விருதுகளும் கொடுக்கப்படுகிறது.
ரஞ்சித் பதிவு:
இந்நிலையில் தமிழக அரசு வழங்கிய விருதுகளை விமர்சித்து இயக்குனர் பா. ரஞ்சித் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விருதுகளின் பட்டியலில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஆர்யா மற்றும் பசுபதிக்கு விருதுகள் அளிக்கப்பட்டது. ஆனால், சிறந்த படமாக அல்லது படத்தை இயக்கிய இயக்குனருக்கு எந்தவித விருதும் அறிவிக்கவில்லை.
தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?
— pa.ranjith (@beemji) January 30, 2026
விருது விமர்சனம்:
அதேபோல் அந்த ஆண்டு வெளியான ஜெய் பீம் படத்திற்கு சிறந்த இயக்குனர், படம் பிரிவில் விருதுகள் அறிவித்திருக்கிறார்கள். இதனால் இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்ட பதிவில், தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? என்று கூறி இருக்கிறார். இதற்கு முன்பு மிக மிக அவசரம் படத்திற்கு விருது வழங்கப்படாததால் அந்த படத்தினுடைய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.