வாய்ப்பு கேட்டபோது என்னை அவரு ரவுடி பையன்னு நினைச்சிட்டாரு - பா.ரஞ்சித் ஓபன் டாக்
இயக்குனர் சசி பற்றி பா.ரஞ்சித்சொன்னது
தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நூறு சாமி. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் உட்பட பலருமே கலந்து கொண்டு படம் தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித், எனக்கு நூறு சாமி படம் ரொம்பவே பிடித்திருந்தது. சசி சாரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். நான் உதவி இயக்குனராக முயற்சி செய்த காலத்தில் முதன் முறையாக ஒரு இயக்குனர் தன்னுடைய அறைக்கு அழைத்து என்னை அமர வைத்து பேசி அனுப்பி வைத்தது சசி சார் தான். அப்போது நான் கவின் கலை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் சசி சார் திடீரென்று எங்கள் கல்லூரிக்கு வந்திருந்தார்.
நூறு சாமி படம்:
அப்போது நான் கல்லூரியில் கொஞ்சம் திமிருடன் சுற்றி இருந்த மாணவன். சசி சார் வந்தபோது நான் அவரை நேராக பிரின்சிபல் அறைக்கு அழைத்து சென்று அமர வைத்தேன். சசி சார் எனக்கு தெரிந்தவர். இவருக்கு நீங்கள் சீட்டு கொடுத்து ஆக வேண்டும் என்று சொன்னேன். அதன் பிறகு சசி சாரிடம் உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்கலாம் என்று முடிவு செய்து உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் என்னை அவருடைய அலுவலகத்திற்கு வர சொன்னார். அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ஆனால், எனக்கு அந்த கேள்விக்கு விடையே தெரியவில்லை. இப்போது இருக்கும் இந்த டி-ஷர்ட் நிறம் என்ன என்று கேட்டார்.
பா.ரஞ்சித் பேசியது:
நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். பைன் ஆர்ட்ஸ் படித்தவன். ஆனாலும் அந்த நிறத்தின் பெயர் எனக்கு சற்றென்று நினைவுக்கு வரவில்லை. சிறிது நேரம் கழித்து நான் மீண்டும் அறைக்குள் சென்றேன். இது ஒரு வகையான பச்சை நிறம் என்று சொன்னேன். இதைக் கேட்டு சசி சார், சரி என்று சொல்லி உன்னை பார்த்ததும் முதலில் ஒரு ரவுடி போல தெரிந்தது. அதற்கு பிறகு தான் நான் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு உனக்கு விடை தெரியவில்லை என்றும் அதை தேடி கண்டுபிடித்து வந்து சொன்னாய். உன்னிடம் ஒரு நல்ல குணம் இருக்கிறது. நீ முயற்சி செய்.
படம் பற்றி சொன்னது:
இப்போது என்னிடம் நீ சேர முடியாது என்று சொல்லி என்னை வேறு ஒரு இயக்குனரிடம் அனுப்பி வைத்தார். ஆனால், அவர் அனுப்பி வைத்த அந்த மற்றொரு இயக்குனரிடம் நான் சேரவில்லை. முதல் முறையாக நான் ஒரு இயக்குனரை சந்தித்து அவர் என்னை மிகவும் பாசிட்டிவாக அனுப்பினார். நூறு சாமி படத்தை பார்க்கும்போது பல இடங்கள் என்னோடு பெரிதும் கனெக்டாக இருக்கிறது. அதில் நடிகை சுவாசிகா மிக சிறப்பாக நடித்திருந்தார். இதற்கு முன்பு சசி சாரை பூ சசி என்று அழைத்தார்கள். இப்போது 100 சாமி சசி என்று அழைப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் இதில் இருக்கிறது என்று கூறுகிறார்.