'அன்புள்ள இந்து ரெபேக்கா வர்கீஸ் மேம்' - அமரன் 100 நாட்களை கடந்த நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் நெகிழ்ச்சி பதிவு

By krithika · 8/2/2025

மேஜர் முகுந்த வரதராஜனின் மனைவிக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ராஜ்குமார் பெரியசாமியும் ஒருவர். இவர் முதன் முதலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். தளபதி விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தில் இவர் துணை இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தயாரித்திருந்தார். கௌதம் கார்த்திக் மற்றும் சனா மக்புல் நடித்திருந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பின் இயக்குனர் ராஜ்குமார் இயக்கிய இரண்டாவது படம் 'அமரன்'. இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு தீபாவளி முன்னிட்டு வெளியாகி இருந்தது.

அமரன் படம்:

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

படத்தின் கதை:

இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது? அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் 'அமரன்' படத்தின் கதை. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த், மணிரத்னம், சூர்யா, ஜோதிகா, சிம்பு உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி இருந்தனர்.

100 நாட்கள் நிறைவு:

தற்போது அமரன் படம் திரைக்கு வந்து 100 நாட்களைக் கடந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதளப் பக்கத்தில், முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸிற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில், ஆளுமையின் மறு உருவம் தான் இந்து ரெபேக்கா வர்கீஸ். நீங்கள் எடுத்த அனைத்து முடிவிற்கும் நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் படமாக எடுக்க அனுமதித்ததற்கு வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

ராஜ்குமார் பெரியசாமி பதிவு:

மேலும், மேஜர் முகுந்தை நிலையாகக் கொண்டுள்ள இந்துவின் உலகம் தான் 'அமரன்' என்று ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அதோடு இந்துவுடனும், மேஜர் முகுந்த் வரதராஜன்- இந்து ஆகியோரின் மகளோடு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அடுத்து ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 'D55' திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full