முகுந்த் பெற்றோர்களை முதலில் சந்தித்த போது அவர்கள் கேட்டுக்கொண்டது இதான்- சர்ச்சைக்கு அமரன் இயக்குனர் விளக்கம்

By krithika · 5/11/2024

'அமரன்' படம் குறித்து எழும் சர்ச்சைகளுக்கு தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் தான் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாறு ஆகும்.

இப்படத்தில் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிகர்களின் தேர்ந்த நடிப்பு என பாராட்டுவதற்கு ஏராளமான அம்சங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இணையவாசிகள் படம் முழுக்க நெருடலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வந்தார்கள். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான படத்தின் கதாபாத்திரங்களை திரையில் காட்டியதில் நம்பகத்தன்மை இல்லை என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

அமரன் குறித்து எழுந்த சர்ச்சைகள்:

அதாவது படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் சாய்பல்லவி கதாபாத்திரமும் ஒன்று. அவர் மேஜர் முகுந்தன் மனைவி, இந்து ரபேக்கா வர்கீஸ் என்று ஒரு கிறிஸ்டியன் பெண்ணாக படம் முழுவதும் காட்டப்பட்டுள்ளார். ஆனால், மேஜர் முகுந்தாக நடித்த சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தை ஏன் அடையாளப்படுத்தவில்லை என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். நிஜ வாழ்க்கையில் மேஜர் முகுந்து ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்தை காட்டுவதில் தயக்கம் காட்டியுள்ளார்கள் என்று விமர்சித்து வந்தார்கள்.

அமரன் வெற்றி விழா:

இந்த நிலையில், அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பெரியசாமி, 'முகுந்த் வரதராஜனுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஜாலர் திரைப்படமாக இருந்தாலும் நேர்மையாக எடுத்தால் மக்கள் அதை கொண்டாடுவார்கள் என்று இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.'

ராஜ்குமார் பெரியசாமி பேசியது:

இந்த வெற்றி எனக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கு. இது மாதிரியான படங்களை அடுத்தடுத்து எடுப்பதற்கு நம்பிக்கை இருக்கு. கதாநாயகன் ஓகே சொல்லும் போது தான் இயக்குனர், தயாரிப்பாளர்களுடன் எண்ணத்திற்கு உயிர் கிடைக்கும். சிவகார்த்திகேயனின் நடிப்பு, ஜிவி பிரகாஷின் இசை இந்த படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. முகுந்து ஒரு தமிழர். அதனால் ஒரு தமிழ் ரூட்ஸ் இருக்கிற நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்கணும்னு இந்து சொன்னாங்க. அதனால்தான் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வந்தார்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:

மேலும், இப்படம் குறித்து பல விமர்சனங்கள் வந்தது. முகுந்த் எப்பவுமே தன்னை ஒரு இந்தியன் என்று சொல்லிக்க தான் ஆசைப்படுவான். அவன் தன்னுடைய சான்றிதழில் கூட, எந்த ஒரு குறியீடும் இருக்கக் கூடாது என்று நினைப்பான். அதனால அவனுக்கு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் ஒரு ஆர்மி மேனாக இந்த படத்தில் குடுங்க என்று அவரின் குடும்பத்தார் எங்களது முதல் சந்திப்பிலேயே கேட்டுக் கொண்டார்கள். அவர் வேற ஒரு சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும், இல்ல இந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அது ஒரு முக்கியமான விஷயமாக நம் பார்வையில் படவில்லை. ஏனென்றால், நாங்க அவங்க வீட்டுக்கு போகும்போது நானும் அவங்களை என்ன என்று கேட்கவில்லை. அவங்களும் என்னை என்ன என்று கேட்கவில்லை. இப்படிதான் இந்த படத்தை எடுத்திருக்கிறோம். அதைத் தாண்டி மேஜர் முகுந்த் வரதராஜன் அசோகச் சக்கர விருதை பெற்றவர். அவர் ஆற்றிய சிறப்பான பணிக்கு, அந்த தியாகத்திற்கும் மரியாதை நியாயமாக 'அமரன்' படம் செய்திருக்கிறது என்று நான் மனதார நம்புகிறேன். நீங்க எல்லாரும் அதை நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்

Tamil Behind Talkies AMP · Quick view
View full