லப்பர் பந்து படத்தில் விஜயகாந்த் பாடல் ஏன்? இயக்குனர் கொடுத்த விளக்கம் - வைரலாகும் வீடியோ
லப்பர் பந்து படத்தில் இடம் பெற்ற விஜயகாந்த் பாடல் குறித்து இயக்குனர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படத்தில் தினேஷ் - தீவிர விஜயகாந்த் ரசிகராகவும், ஹரிஷ் கல்யாண்- தீவிர விஜய் ரசிகராகவும் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் படத்தில் தினேஷ் வரும்போது எல்லாம் விஜயகாந்த் உடைய 'நீ பொட்டு வெச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம்' என்ற பாடல் வருகிறது.
லப்பர் பந்து படம்:
படத்தில் விஜயகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைய இடம் பெற்றிருக்கிறது. இதனாலே படத்தை பாராட்டி இருந்தார்கள் என்று சொல்லலாம். அதோடு இந்த படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் லப்பர் பந்து படகுழுவினர் கலந்துகொண்டு அவர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார்கள். அப்போது இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, நாம் எல்லோருமே விஜயகாந்த்தின் ரசிகர்கள் தான்.
இயக்குனர் பேட்டி:
நானும், நடிகர் தினேஷும் விஜயகாந்த்தின் மிகப் பெரிய ரசிகர்கள். நான் எடுக்கும் முதல் படத்திலேயே கண்டிப்பாக விஜய்காந்த் சாரை கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் அவருடைய பாடல்களை படத்தில் வைத்து கொண்டாடினேன். படத்திற்கு தேவை என்பதால் தான் வைத்தோம். எந்த ஒரு பாடலையும் காட்சியையும் திணிக்கவில்லை. கதையை எடுக்கும்போதே தினேஷ், விஜயகாந்த் சாருடைய தீவிர ரசிகர் என்று நினைத்து தான் படம் எடுத்தேன். இனிமேல் அட்டகத்தி தினேஷ் இல்லை கெத்து தினேஷ்.
#Watch | "இனி அவரு அட்டகத்தி தினேஷ் இல்ல.. கெத்து தினேஷ்"
— Sun News (@sunnewstamil) September 23, 2024
- சேலத்தில் ‘லப்பர் பந்து’ படக்குழு ஜாலி டாக்#SunNews | #LabbarPandhu | #CaptainVijayakanth | #AttakathiDinesh | #HarishKalyan pic.twitter.com/6OHJrU3s7r
விஜயகாந்த் குறித்து சொன்னது:
அதேபோல் இது வயதான கதாபாத்திரம் என்பதால் முதலில் தினேஷ் இடம் சொல்ல தயங்கினேன். ஆனால், அவர் சற்று யோசிக்காமல் நடிக்கிறேன் என்று சொன்னார். நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று நினைத்து பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் வெற்றி அடைந்ததற்கு காரணம், படத்திற்காக பாடுபட்ட ஒவ்வொரு கலைஞர்களுடைய உழைப்பு என்று பேசி இருக்கிறார்.
படத்தின் கதை:
படத்தில் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். இவர் பேட்டிங் ஆடுவதில் சிறந்த வீரராக இருக்கிறார். இவர் அடிக்கும் சிறந்த பந்துமே சிக்ஸர் தான். இவர் விளையாடும் டீம் தான் கோப்பையை தட்டிச் செல்லும். ஆனால், இவர் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் பந்துவீச்சில் பட்டய கிளப்புபவர். இவர்கள் இருவருக்கும் இடையே வெறியுடன் போட்டோ போட்டிகள், பொறாமைகள், சரிக்கு சரி என்று தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை, சமூகத்தில் நடக்கும் ஆதிக்கத்தையும் எதார்த்தமாக கூறியிருக்கும் இப்படம் பலரது பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது.