டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு என்னிடம் அனுமதி வாங்கவில்லை, ஆனால் - இயக்குனர் தியாகராஜன் ஓபன் டாக்

By subhashini · 7/6/2025

டூரிஸ்ட் பேமிலி படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியது குறித்து இயக்குனர் தியாகராஜன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் முதலில் வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பாராட்டி இருந்தார்கள்.

டூரிஸ்ட் பேமிலி படம்:

இதைத்தொடர்ந்து சமீபத்தில் சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் வசூல்:

இந்த படத்தை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே பாராட்டி இருக்கிறார்கள். இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் 75 கோடி வசூல் செய்தது. இதை படத்தினுடைய தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான மம்பட்டியான் என்ற படத்தில் இடம்பெற்ற மலையனூரு நாட்டம என்ற பாடலை பயன்படுத்தி இருப்பார்கள். அந்த பாடலுக்கு சசிகுமார் தன்னுடைய மகன்களுடன் சேர்ந்து நடனமும் ஆடி இருப்பார்.

இயக்குனர் தியாகராஜன் பேட்டி:

தற்போது இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக மம்பட்டியான் படத்தை இயற்றிய இயக்குனர் தியாகராஜன் கூறியிருப்பது, டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் மலையனூர் நாட்டாம பாடலை பயன்படுத்துவதற்கு என்னிடம் எந்த அனுமதியுமே வாங்கவில்லை. அந்த பாடல் மக்களிடம் மீண்டும் ஹிட்டாகி இருக்கிறது. டூரிஸ்ட் பேமிலி படகுழுவை நான் வாழ்த்தி இருந்தேன். என்னிடம் அனுமதி பெறாமல் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது வழக்கெல்லாம் தொடர மாட்டேன், பணமும் கேட்க மாட்டேன். எனக்கு அந்த மாதிரியான எந்த எண்ணமும் இல்லை.

டூரிஸ்ட் பேமிலி படம் பற்றி சொன்னது:

அந்த பாடல் மீண்டும் ஹிட் ஆகியிருப்பதற்கு நான் தான் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினருக்கு பணம் கொடுக்க வேண்டும். பல வருடங்கள் கழித்த பின்னரும் அந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை அளித்திருக்கிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தில் அந்த பாட்டை பயன்படுத்தி அதற்காக நான் காப்பிரைட்ஸ் கேட்கவில்லை. இனியும் கேட்கப் போவதில்லை. இந்த பாடல் மட்டும் இல்ல நான் எடுத்த படங்களில் வந்த பாடலை யார் பயன்படுத்தினாலும் காப்பிரைட்ஸ் கேட்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார். தியாகராஜனின் இந்த பெருந்தன்மையை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full