தமிழ்நாடு அரசின் 7 விருதுகளை தட்டி தூக்கிய ஜெய்பீம் - இயக்குனர் த.செ.ஞானவேல் போட்ட எமோஷனல் பதிவு
தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகளை வாங்கிய பிரபலங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சமூக சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் படங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுக்கு
தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறந்த தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல பிரிவுகளில்
சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்வி ஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவற்றை அறிவித்திருக்கிறது. இந்த நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் துவக்கி வழங்குகிறார். அதன்படி 2009ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த அனைத்து திரைப்பட விருதுகளும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு விருது:
மேலும், சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட ஏழு பிரிவுகளில் ஜெய் பீம் படம் விருதுகளை வென்றிருக்கிறது. இந்த நிலையில் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் நன்றி தெரிவித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஜெய் பீம் படம் வெளியானதும் நம்முடைய தமிழ்நாடு முதல்வர் அவர்கள் படம் பார்த்து பாராட்டி இருந்தார். பழங்குடி மக்களுக்கான அரசின் திட்டங்கள் உரியவர்களுக்கு விரைந்து சென்றடைய சிறப்பு உத்தரவு போட்டார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது பயன் பெற்றவர்கள் என்னை சந்தித்து நன்றி சொல்வார்கள்.
ஞானவேல் பதிவு:
அப்போதெல்லாம் படைப்பின் நோக்கம் நிறைவேறியதை எண்ணி நான் மன நிறைவு அடைந்தேன்.
இப்போது 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக ஜெய் பீம் தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சிறந்த இயக்குனர் உட்பட ஏழு விருதுகளை ஜெய்பீம் படம் வென்றிருப்பதில் இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி. என் அங்கீகாரத்தை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் விருது தேர்வு குழுவுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். திரைப்படத்தின் நோக்கம் நிறைவேறவும் உரிய அங்கீகாரம் கிடைக்கவும் துணையின்ற அனைவரையும் நன்றியுடன் வணங்குகிறேன்.
நன்றி தெரிவித்த ஞானவேல்:
ஜெய் பீம் கதையை கேட்டு தயாரிக்க முன் வந்ததோடு, நீதிநாயகம் சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இந்த படத்தை பல உயரங்களுக்கு அழைத்து சென்ற சூர்யா அவர்களுக்கும், ஜெய் பீம் ஆக்கத்திற்கு உடன் உழைத்த சக தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனம் நெகிழ்ந்த அன்பும் நன்றியும். எளிய மக்களின் சட்டபூர்வ பாதுகாப்புக்கு சமரசம் இல்லாமல் உழைக்கும் நீதி நாயகன் கே.சந்துரு, பேராசிரியர் பிரபா கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் என்னுடைய வணக்கம். ஜெய் பீம் படத்தை கொண்டாடிய அதன் வெற்றியை உறுதி செய்த ஊடக நண்பர்களுக்கும் மக்களுக்கும் இந்த மகிழ்வான நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.