கேப்டன் விஜயகாந்த்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் - கோரிக்கை வைத்த சுதீஷ்
கேப்டன் விஜயகாந்த்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் - கோரிக்கை வைத்த சுதீஷ்
தமிழக அரசியலில் மீண்டும் கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்து வரும் நிலையில், தேமுதிகவும் அரசியல் விவாதங்களில் முக்கிய இடம்பிடித்து வருகிறது. குறிப்பாக, காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் மற்றும் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது கோரிக்கை ஆகியவற்றை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற தேமுதிக பொருளாளரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் ஷின் நடவடிக்கைகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
பிரதமரை நேரில் சந்தித்து வைத்த முக்கிய கோரிக்கைகள்
2020 ஆகஸ்ட் 3-ஆம் தேதி, அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த எல்.கே. சுதீஷ், பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பில், தமிழக விவசாயிகளின் உரிமையை பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் மேகதாது அணைத் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அதோடு, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் சமூக மற்றும் அரசியல் பங்களிப்பை கருத்தில் கொண்டு அவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக வளர்ச்சி
2005-ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக), மிகக் குறுகிய காலத்திலேயே தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்தது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கட்சி, மாநிலம் முழுவதும் கணிசமான வாக்குகளைப் பெற்றது. விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு இடம் மட்டுமே என்றாலும், 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்பட்டது.
2011 தேர்தல்... தேமுதிக உச்சம்
தேமுதிக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது 2011 சட்டப்பேரவைத் தேர்தல்தான். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக, 41 தொகுதிகளில் களமிறங்கி 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் விஜயகாந்த் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகக்கு அடுத்த பெரிய அரசியல் சக்தியாக தேமுதிக உருவெடுத்தது அந்த காலகட்டத்தில்தான்.
மாறிய கூட்டணிகள்... சரிந்த தேர்தல் வெற்றிகள்
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்து தேமுதிக போட்டியிட்டது. தொடர்ந்து 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட போதிலும், கட்சியால் மீண்டும் பழைய வெற்றியைத் திரும்பப் பெற முடியவில்லை. விஜயகாந்தின் உடல்நலக் குறைவு மற்றும் அரசியல் சூழ்நிலைகளும் கட்சியின் வளர்ச்சியை பாதித்தன.
மீண்டும் அரசியல் களத்தில் தேமுதிக?
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் தேமுதிக நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காவிரி, மேகதாது போன்ற தமிழக உரிமை சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பது அரசியல் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக, மீண்டும் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துமா என்பதே தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள கேள்வியாக உள்ளது.