விஜய் நேரில் வந்து வைத்த வேண்டுகோள்- தன் வீட்டிற்கு விஜய் வந்த காரணம் குறித்து பிரேமலதா
நடிகர் விஜய் உடனான சந்திப்பு குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து வருகிறது. தற்போது நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'கோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். அதனை தொடர்ந்து, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்த், ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய ஷூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது.
கோட் படம்:
பின், இப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவதாக வெளியாகிய 'ஸ்பார்க்' என்னும் பாடல் கடும் விமர்சனத்திற்கு உண்டானது. அதையெல்லாம் சரி செய்யும் வகையில், சமீபத்தில் கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் இப்படத்தில் வருவது போல் காட்சிகள் இருக்கிறது என்று சொன்ன நிலையில், அந்தக் காட்சிகள் எதுவும் ட்ரெய்லரில் இடம்பெறவில்லை.
விஜய் - பிரேமலதா சந்திப்பு:
மேலும் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி இப்படம் வெளியாகும் நிலையில் நடிகர் விஜய், பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்தார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரேமலதா விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்று விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சந்தித்தனர். பின் விஜயகாந்தின் உருவப்படத்துக்கு நடிகர் விஜய் மரியாதை செய்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அந்த சந்திப்பு தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பு:
அதில் அவர், எங்கள் வீட்டுக்கு அருகில் தான் விஜய் பல ஆண்டுகாலமாக வசித்தார். கேப்டனுக்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் உள்ள நட்பு உலகத்துக்கே தெரிந்தது. விஜய் எங்கள் வீட்டுக்கு வருவது புதிதல்ல, அவர் பலமுறை எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை. மேலும், விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியனோடு அவர் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எனது மகன் சண்முகப்பாண்டியன், நீங்கள் தான் எங்களுக்கு சினிமாவில் ரோல் மாடல் என்று விஜய் இடம் கூறியதும், உடனே அரசியலில் நீதான் எனக்கு சீனியர் என்று விஜய் பிரபாகரனிடம் விஜய் சொன்னார்.
கோட் குறித்து பிரேமலதா:
மேலும், 'கோட்' திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ மூலம் வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும், படம் ரிலீஸ் ஆன பிறகு குடும்பத்தோடு வந்து படம் பார்க்க வேண்டும் எனவும், படத்தில் விஜயகாந்த் வரும் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது என விஜய் கூறியதாக பிரேமலதா கூறியுள்ளார். இந்நிலையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட இருப்பதால், விஜயகாந்த் படத்தில் சிறுவயதில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கிய விஜய். தற்போது விஜயகாந்த் நிறுவிய கட்சியுடன் கூட்டணி அமைப்பாரா என விவாதிக்கப்பட்டு வருகிறது.