சன் டிவியிலிருந்து விலகி விஜய் டிவி சீரியலில் கமிட்டாகி இருக்கும் எதிர்நீச்சல் நடிகை மதுமிதா
சீரியல் நடிகை மதுமிதா தற்போது விஜய் டிவி சீரியலில் கமிட்டாகி இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்தது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த சீரியலை ‘கோலங்கள்’ சீரியல் இயக்கிய திருச்செல்வம் இயக்கியிருந்தார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டமும், பெண்களுக்கான உரிமையை மையமாகக் கொண்ட கதைதான் எதிர்நீச்சல்.
மேலும், ஆண் ஆதிக்கம் கொண்ட நபர்களின் மத்தியில் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதை சொல்லும் வகையில் இந்த சீரியல் இருந்தது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் முதலில் மறைந்த நடிகர் மாரிமுத்து தான் நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் திடீரென்று இருந்து விட்டார். பின் அவருக்கு பதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்திருந்தார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலின் டிஆர்பி திடீரென்று குறைய தொடங்கியது.
எதிர்நீச்சல் சீரியல் :
மேலும், குணசேகரன் கதாபாத்திரத்தை மாற்றியதால் தான் இந்த சரிவுக்கு காரணம் என்று பலருமே கூறியிருந்தார்கள். பின், இந்த சீரியலை முன்னறிவிப்பு எதுவும் இன்றி திடீரென்று முடித்து விட்டார்கள். இது மக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் 'எதிர்நீச்சல் 2' சீரியல் வருமா என்று கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில்தான் சன் டிவியில் 'எதிர்நீச்சல் 2'சீரியல் தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
நடிகை மதுமிதா :
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் மதுமிதா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில், கன்னடத்தில் சில சீரியல்கள் மற்றும் சினிமாக்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு கன்னடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு தெலுங்கு சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியல் ஹிட்டானது மூலம் தான் இவர் பிரபலமானார். தமிழில் இவர் நடித்த இரண்டாவது சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’. மறைந்த நடிகர் மாரிமுத்து மூலம் இந்த சீரியல் பட்டித் தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. மதுமிதாவிற்கு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திரைப்படங்கள், சினிமா வெப் சீரியஸ் வாய்ப்புகள் வந்ததாக கூறப்படுகிறது.
எதிர்நீச்சல் 2 வில் நடிக்கவில்லை :
ஆனால், தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் 2 சீரியலில் மதுமிதா நடிக்கவில்லை. இது குறித்து தனது instagram பக்கத்தில், நான் புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கப் போகிறேன். அதனால், 'எதிர்நீச்சல்' சீரியலின் இரண்டாவது பாகத்தில் நான் நடிக்கப் போவதில்லை. பல்வேறு காரணங்களால் அதிலிருந்து நான் விலகுகிறேன். இதுவரை எனக்கு அன்பும், ஆதரவும் அழித்து வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். தற்போது எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடித்து வருகிறார்.
புது சீரியலில் மதுமிதா :
இந்நிலையில், நடிகை மதுமிதா தற்போது விஜய் டிவியில் ஒரு புது சீரியலில் கமிட் ஆகி உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் புதிதாக துவங்க இருக்கும் சீரியல்தான் 'அய்யனார் துணை'. இந்த சீரியலில் கதாநாயகியாக மதுமிதா நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இந்நிலையில், விஜய் டிவி இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சீரியலின் பிரமோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த சீரியலில் மதுமிதா நிலா என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிகிறது.