கோலங்கள் சீரியலால் அதனை இழந்தேன், எதிர் நீச்சல்ல அந்த தப்ப பண்ண மாட்டேன் - மனம் திறந்த திருச்செல்வம்.

By subhashini · 5/3/2023

கோலங்கள் சீரியல் குறித்து இயக்குனர் திருச்செல்வம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து இருந்தார். பின் தமிழ், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார்.

இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரில் மூலம் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார்.

திருச்செல்வம் சீரியல்கள்:

மேலும், திருச்செல்வம் இயக்கிய சீரியல்கள் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் எல்லாம் பெண்களின் வாழ்வை மையமாக கொண்ட கதையாக அமைந்திருக்கும். தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்து வந்து அவர்களை வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள். இதை இந்த வீட்டுக்கு கடைசியாக வரும் மருமகள் ஜனனி தட்டி கேட்கிறார். இதனால் வீட்டில் பல கலவரங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும், சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

திருச்செல்வம் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இயக்குநர் திரு செல்வம் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் இதற்கு முன்பு இயக்கிய கோலங்கள் தொடர் குறித்து சில சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார். அதில் அவர், நான் கோலங்கள் சீரியலில் பிசியாக இருந்த போது எனக்கு பல படங்களை இயக்க வாய்ப்பு வந்தது. என்னை போல தான் சமுத்திரகணியும் முதலில் சீரியலை இயக்கிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் உதவி இயக்குனரிடம் கதையை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

கோலங்கள் சீரியல் குறித்து சொன்னது:

ஆனால், என்னால் அப்படி கோலங்கள் சீரியலை மற்றவரிடம் கொடுத்துவிட்டு செல்ல முடியவில்லை. அதனால் தான் பட வாய்ப்புகள் இழந்தேன். மேலும், கோலங்கள் சீரியலில் கிடைத்த அன்பை மக்கள் தற்போது எனக்கு எதிர்நீச்சல் சீரியலிலும் கொடுத்து வருகிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் சுவாரசியம் இல்லை என்று தெரிந்தால் தொடரை முடித்து விடலாம் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full