இளையராஜாவை விமர்சித்து பேசிய வைரமுத்துவிற்கு கங்கை அமரன் கொடுத்திருக்கும் பதிலடி வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக யாஷிகா ஆனந்த் திகழ்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் படிக்காத பக்கங்கள். இந்த படத்தை செல்வம் மாதப்பன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து எழுதி இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படத்தை பற்றி பேசி இருந்தார்கள்.

Advertisement

மேடையில் வைரமுத்து சொன்னது:

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து இந்த விழாவில் கூறியிருப்பது, சமீப காலமாக இசை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்ற பிரச்சனை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது. இசையும், பாடல் வரி களும் சேர்ந்தால் தான் நல்ல பாடல் உருவாகும். ஆனால், சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசி இருப்பது தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது.

கங்கை அமரன் பதிலடி:

இதை பார்த்த பலருமே இவர் இசைஞானி இளையராஜாவை தான் மறைமுகமாக விமர்சித்து பேசி இருக்கிறார் என்று விவாதங்கள் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக இசையமைப்பாளர் கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போல பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி வேண்டும்.

Advertisement

வைரமுத்து குறித்து சொன்னது:

அவருடைய பாடலுக்கு அதிகமாக புகழ் வந்ததால் கர்வம் தலைக்கேறி விட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார். வைரமுத்துவை வாழ வைத்தது இளையராஜா தான். இதனால் இளையராஜாவின் போட்டோவை வைத்து தினமும் வைரமுத்து வணங்க வேண்டும். இளையராஜா இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரை இருந்திருக்காது. நான் அவருக்கு சவால் விடுகிறேன்.

Advertisement

இளையராஜா குறித்து சொன்னது:

இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் கிடையாது. தன்னைத்தானே புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிற கவிஞர்கள் இங்கே யார் இருக்கிறார்? அதை இவர் தான் செய்கிறார். நான் தான், நான் மட்டும் தான் என இருக்கிறார் வைரமுத்து. இளையராஜா குறித்து சின்ன குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Advertisement