திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த GVM - ஒன்றுகூடும் 90ஸ் பேவரைட் குரல்கள்
கோலிவுட்டில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட்.
இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதன் பின் இவர் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார்.
அதற்கு பிறகு இவர் மின்னலே படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். மேலும், இவர் இயக்குனர் மட்டுமில்லாமல், நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் கௌதம் மேனன் நடத்தும் இசை நிகழ்ச்சி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கௌதம் மேனன் நிகழ்ச்சி:
ரொமான்டிக் இயக்குனரான கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு 'என்னோடு வா வீடு வரைக்கும்' என்ற இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தன்னுடைய தனித்துவமான ஸ்டைல் மூலம் மனதைத் தொட்ட கதையம்சம் கொண்ட படங்களின் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கௌதம் மேனன்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இந்த நிகழ்ச்சி இவருடைய படங்களில் காலத்தால் அழியாத இசை மீண்டும் மேடையில் கொண்டுவர இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கவுதம் மேனனின் படங்களில் முக்கிய அங்கமாக இருந்த பிரபல பாடகர்கள்,
கலைஞர்கள் எல்லோருமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதில் கார்த்திக், சித் ஸ்ரீராம், பிளேஸ், பால் டப்பா, ஆல்போன்ஸ், ஷாஷா திருப்பதி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா மற்றும் சாருலதா மணி உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பல தலைமுறைகளை கடந்த ஐகானிக் பாடல்களின் இசை விருந்தாக அமைய இருக்கிறது.
நிகழ்ச்சி தேதி:
நவீனமும் பழமையும் கலந்த ஒரு இசை பயணமாக தான் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 7மணி முதல் 9மணி வரை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் ஆக்கடமியில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. புக் மை ஷோவில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.