ஆல்பம் பாடல் எழுத காரணம் இவர் தான் - 'குட் பேட் அக்லி' பாடல் ஆசிரியர் டார்க்கி நாகராஜா பகிர்ந்த தகவல்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த ‘விடா முயற்சி’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதோடு இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். மேலும், இன்று வெளிவந்த குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற புலி புலி என்ற பாடல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பாடலை பாடியவர் டார்க்கி நாகராஜா. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான்.
குட் பேட் அக்லி படம்:
இந்நிலையில் இவரை பற்றி பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவர் இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், மேடை கலைஞர் என பன்முகம் கொண்டவர். இவர் மலேசியாவில் வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவி மலர்விழி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் தீ கிஸ் என்ற பெயரில் தான் தன்னுடைய இசைக் குழுவை நடத்தி வருகிறார். ராக் இசை பாடல்களை மைக்கேல் ஜாக்சன் போல நடனமாடி பாடுவது தான் இவருடைய ஸ்டைல்.இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களிலும் பணியாற்றி வருகிறார்.
டார்க்கி நாகராஜா குறித்த தகவல்:
தமிழில் இவர் கபாலி படத்தில் இடம்பெற்ற உலகம் ஒருவனுக்காக, அக்கா மக, மரவனா போன்ற படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் பாடிய புலி புலி பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இவர் 7 வயதிலேயே முறையாக இசையை கற்று பத்து வயதில் இருந்து பாட தொடங்கி இருக்கிறார். இவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட ஆல்பம் பாடல்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும், இவர் தன்னுடைய இசை ஆல்பங்கள் பற்றி ஏற்கனவே அளித்த பேட்டியில், நான் ஆல்பம் பாடல்கள் செய்வதற்கான காரணம் என்னுடைய அக்கா மகள் தான். ஒரு சமயத்தில் அவர் தீ விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 75% காயம் அடைந்தார்.
டார்க்கி நாகராஜா பேட்டி:
அந்த சம்பத்திற்கு பிறகு தான் அக்கா மக ஆல்பத்திற்கான பாடல் வரிகளை நான் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இரண்டு வருடமாக நான் அந்த பாடல் வரிகளை எழுதி எழுதி படித்துக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு தான் அந்த ஆல்பம் உருவானது. எங்களுடைய வாழ்க்கை எல்லாம் ஒரு கோழி தூக்கம் மாதிரி தான். எப்போதுமே தூக்கம் இல்லாமல் வேலை என்று ஓடிக்கொண்டிருப்போம். ஒரு நாளில் ஒரு மணி நேரத்தை ஒரு பாடலுக்கு கொடுக்கிறேன் என்றால் 365 நாளும் அந்த ஒரு மணி நேரம் அந்த பாடலுக்கு கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த பாடல் எப்படியெல்லாம் வரும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.
ஆல்பம் பற்றி சொன்னது:
சினிமா பாடல்களை பொறுத்தவரை ஒரு பாடல் சுமாராக இருந்தாலுமே நடிகர்களுக்காக பாட்டு கேட்பார்கள். சில பேர் ஏ ஆர் ரகுமானுக்காக கேட்பார்கள். சில பேர் அந்த படத்திற்காக பாடலைக் கேட்பார்கள். ஆனால், ஆல்பம் என்று வந்துவிட்டால் முழுக்க முழுக்க நம்முடைய கையில் தான் இருக்கிறது. அதில் நம்முடைய முகம், பாவனை, ஆடை, நாம் அணியும் அணிகலன்கள், இசை, பாடல், வரிகள், பாடலை வெளிப்படுத்தும் விதம் என அனைத்துமே உள்ளடக்கி இருக்கும். அப்படி இருக்கும் போது நாம் ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்து தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு வார்த்தையையும் எழுதிவிட்டு அதை குடும்பத்திடம் கொடுத்து கருத்து கேட்பேன். அவர்கள் நன்றாக இல்லை என்று கூறினால் மீண்டும் அதை திருத்துவேன், எழுதுவேன். இப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு பாடல்களையுமே உருவாக்குகிறேன் என்று கூறியிருக்கிறார்.