கதை, காமெடி டிராக்னு எல்லாமே ரெடியா, இதுக்கு மட்டும் தான் வெயிட்டிங் - செந்தில் கவுண்டமணி கூட்டணி குறித்து செம அப்டேட்.

By Rajkumar · 27/2/2022

தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி– செந்தில் காம்போ தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படி தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி - செந்தில் கொடிகட்டி பறக்க இவர்களுடைய காமெடி ட்ராக் எழுதியவர்களில் முக்கியமானவர் ராஜகோபால்.

இவர் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்திருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கவுண்டமணி-செந்தில் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியது, என்னுடைய முதல் படமே வைதேகி கல்யாணம். மணிவாசகம் என்னுடைய நண்பர். அப்போ அவர் தான் கவுண்டமணிக்கு காமெடி ட்ராக் எழுவார். நான் முதல் படம் பண்ணும் போது மணிவாசகம் கவுண்டமணிக்கு போன் செய்கிறார்.

ராஜகோபால் அளித்த பேட்டி:

அப்போது எனக்கு கவுண்டமணியுடன் எந்த ஒரு அறிமுகம் இல்லை. பின் கவுண்டமணி நம்ம ஊரு பூவாத்தா மாதிரி காமெடி இருக்கனும் என்று சொல்கிறார். அதற்கு மணிவாசகம், ஐயோ என்னை விட ஒரு ஜாம்பவான் இருக்கிறார். சீன் செமையா சொல்கிறார். உங்களுக்கு ட்ராக் அவர் தான் எழுதறாரு என்று மணிவாசகம் சொல்கிறார். உடனே கவுண்டமணி, அவர் யாருப்பா? எனக்கு தெரியாம என்று கவுண்டமணி கேட்க, ராஜகோபால் என்று ஒருத்தர் இருக்கிறார். செந்தில் தான் அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்று மணிவாசகம் கவுண்டமணியிடம் சொல்கிறார். உடனே கவுண்டமணி, அய்யோ அந்த பையனா! செந்திலுக்கு டபுள் மீனிங் காமெடி எழுதுறவன் ஆச்சே என்று சொல்கிறார்.

ராஜகோபாலை கிண்டல் செய்த கவுண்டமணி:

ஆனால், நான் அந்த மாதிரி எல்லாம் எழுதி இரண்டு வருஷத்துக்கு மேலானது. அதை ஞாபகம் வைத்துக்கொண்டு கவுண்டமணி சார் சொன்னார். பின் எப்படியோ அவர்கிட்ட மணிவாசகம் ஏதேதோ பேசி என்னை ஓகே பண்ணிட்டார். பொள்ளாச்சியில் முதல் சூட்டிங் நடந்து கொண்டிருக்கின்றது. இரண்டு நாள் கழித்து கவுண்டமணி, செந்தில் வருகிறார்கள். படத்தில் ஒரு காமெடி சீன் வரும். அந்த சீன் எடுக்கும்போது கவுண்டமணி அண்ணா சீனை படித்துக் காட்டச் சொல்கிறார். நான் அப்போதான் அவருக்கு அறிமுகமானேன். அப்பவே, நான் அண்ணா படிச்சு காட்டினால் ரொம்ப lag ஆக இருக்கும். நான் வாய்விட்டு சொல்றேன்னு சொன்னேன்.

கவுண்டமணியின் முதல் அறிமுகம்:

ஏம்பா, பேப்பரில் இருக்கிறதை தானே நீ வாயில் சொல்லப் போற, படிச்சா ஸ்லோவாக இருக்கும். அப்ப அந்த சீன் நல்லா இல்லைன்னு அர்த்தம் என்று சொன்னார். இல்லை அண்ணே, நான் சொல்றேன் என்று சொல்கிறேன். இருந்தும் அவர் பேப்பரை கேட்கிறார். இப்படி ரெண்டு பேருக்குள்ளே வாக்குவாதம் வந்து நான் பேப்பரை தூக்கிப் போட்டுட்டு கோவமாக போயிட்டேன். நான் போனவுடன் அவருக்கு டென்சன் ஆகிவிட்டது. பின் மணிவாசகத்துகிட்ட நீ வேற சீன் எடு என்று கவுண்டமணி சொல்லிட்டார். நான் கோபத்தில் ஓரமாக வண்டி பக்கத்தில் போய் நின்னுட்டு இருந்தேன்.

முதல் சந்திப்பே சண்டை:

அப்போது செந்தில் அண்ணன் வந்து, அவர் எவ்வளவு பெரிய சீனியர். எல்லாரும் அவர்கிட்ட எவ்வளவு பணிவா பேசுவாங்க. நீ என்ன இப்படி பேசிட்டு இருக்க என்று சொல்லி சமாதானத்துக்குக் கூப்பிட்டுட்டு போனார். அப்புறம் கவுண்டமணி அண்ணன் மத்தவனெல்லாம் மூக்குல சொல்லுவான். நீ வாயில சொல்லு என்று அவரோட வழக்கமான நய்யாண்டியில் என்னிடம் பேசினார். நானும் வாயிலேயே அந்த சீனை சொன்னவுடன் அவர் சிரிசிட்டே நல்லாதான் இருக்கு என்று சொன்னார். உடனே மணிவாசகம் இதை தான் நாங்கள் சொன்னோம் என்று சொல்லி அந்த சீன் எடுக்கப்பட்டது. இப்படி சண்டையில் ஆரம்பித்த எங்கள் உடைய நட்பு நீண்ட காலம் தொடர்ந்தது.

மீண்டும் வரும் கவுண்டமணி - செந்தில் காமெடி:

அதற்கு பிறகு 70 படங்களில் நான் கவுண்டமணி அண்ணன் உடன் பணியாற்றி இருக்கேன். எல்லா காமெடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சீக்கிரமாகவே மீண்டும் கவுண்டமணி- செந்தில் கூட்டணியை திரையில் பார்க்க போறீங்க. கதை, காமெடி ட்ராக் என எல்லாம் ரெடியா இருக்கு. நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் சீக்கிரமே திரையில் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். இப்படி ராஜகோபால் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கவுண்டமணி - செந்தில் காமெடியைக் காண ஆர்வத்துடன் இருக்கிறோம் என்று கமெண்ட் எல்லாம் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full