"சஞ்சு சாம்சனுக்கு ஒரு நீதி... அபிஷேக் சர்மாவுக்கு ஒரு நீதியா? - இந்திய அணியின் தேர்வை கேள்வி எழுப்பிய விஹாரி!"

"சஞ்சு சாம்சனுக்கு ஒரு நீதி... அபிஷேக் சர்மாவுக்கு ஒரு நீதியா? - இந்திய அணியின் தேர்வை கேள்வி எழுப்பிய விஹாரி!"

By S.Dhilip Kumar · 27/7/2026

அபிஷேக் சர்மா மீது மௌனம் ஏன்?

இந்திய அணியின் தேர்வு முறையை முன்னாள் இந்திய வீரர் ஹனுமா விஹாரி கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, சஞ்சு சாம்சனுக்கு ஒரு அளவுகோலும், அபிஷேக் சர்மாவுக்கு மற்றொரு அளவுகோலும் பின்பற்றப்படுவதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"சஞ்சு ஐந்து போட்டிகளில் தோல்வி... பிறகு தொடர்நாயகன்"

இதுகுறித்து பேசிய விஹாரி, "உலகக் கோப்பைக்கு முன் சஞ்சு சாம்சன் ஐந்து போட்டிகளில் ரன் எடுக்காததால் முதல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் மீண்டும் வாய்ப்பு கிடைத்தபோது உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்றார். அதே உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா எத்தனை ரன்கள் எடுத்தார்?" என்று கேள்வி எழுப்பினார்.

அபிஷேக்கின் சமீபத்திய செயல்பாடு ஏமாற்றம்

அபிஷேக் சர்மாவின் சமீபத்திய பேட்டிங் புள்ளிவிவரங்களையும் விஹாரி சுட்டிக்காட்டினார். "இங்கிலாந்து தொடரில் ஒரு அரைசதத்தைத் தவிர குறிப்பிடத்தக்க இன்னிங்ஸ் எதுவும் இல்லை. 20 அல்லது 30 ரன்கள்கூட இல்லை. கடைசி எட்டு போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே. உலகக் கோப்பை போட்டிகளையும் சேர்த்துப் பார்த்தால், கடைசி 18 இன்னிங்ஸ்களில் வெறும் மூன்று அரைசதங்கள்தான்," என்று அவர் தெரிவித்தார்.

"சஞ்சு மூன்று போட்டி... மூன்றிலும் அரைசதம்"

சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டதாகவும், அதே அளவிலான விமர்சனம் அபிஷேக்குக்கு வராதது ஏன் என்றும் விஹாரி கேள்வி எழுப்பினார். "சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் எத்தனை போட்டிகள் விளையாடினார்? மூன்று. அந்த மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்தார். ஆனால் அபிஷேக் சர்மாவின் கடைசி ஐந்து போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் 16 மட்டுமே. இதைப் பற்றி யாரும் ஏன் பேசவில்லை?" என்று அவர் கூறினார்.

"வெவ்வேறு வீரர்களுக்கு வெவ்வேறு விதிமுறைகளா?"

சஞ்சு சாம்சன் குறித்து எப்போதும் 'நிலைத்தன்மை இல்லை' என்ற விமர்சனம் முன்வைக்கப்படுவதாகவும், ஆனால் அபிஷேக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் விஹாரி சுட்டிக்காட்டினார். "சஞ்சு சாம்சன் நிலைத்தன்மையற்றவர் என்று கூறுகிறார்கள். அது சரி. ஆனால் பெரிய அழுத்தமான போட்டிகளில் அவர் தனியாக வெற்றி பெற்றுத் தரும் திறன் கொண்டவர். அபிஷேக் சர்மாவைச் சுற்றி அதிக ஹைப் இருக்கலாம்.

ஆனால் சஞ்சு சாம்சனும் ஐபிஎல்லில் தனது திறமையை நிரூபித்தவர்தான். அப்படியிருக்கும்போது ஏன் வெவ்வேறு வீரர்களுக்கு வெவ்வேறு விதிமுறைகள்?" என்று விஹாரி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியின் தேர்வு முறையில் அனைவருக்கும் ஒரே அளவுகோல் பின்பற்றப்பட வேண்டுமா என்ற விவாதம் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full