ஜாதி ஒடுக்குமுறையை கொண்ட 'பராரி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் எழில் பெரியவேடி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் பராரி. இந்த படத்தை கலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிசங்கர், சங்கீதா கல்யாண் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை தான் இந்த படமாக எடுத்திருக்கிறார்கள். வீரத்தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் ஆதிக்க ஜாதி மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஊரின் இரண்டு பக்கங்களில் வாழ்கிறார்கள். இருவருமே ஒரே குலதெய்வத்தை தான் கும்பிடுகிறார்கள். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை நடக்கிறது.
ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் தான் ஹீரோ ஹரிசங்கர். இன்னொரு பக்கம் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் ஹரிசங்கரை காதலிக்கிறார். ஆனால், இவருடைய காதலை ஹரி ஏற்கவில்லை. அதற்கு காரணம், இரண்டு ஜாதி மக்களுக்கும் இடையே நடக்கும் சண்டை தான். இதனால் இவர் இந்த காதலை ஏற்க மறுக்கிறார். இதற்கிடையில் வருடத்திற்கு மூன்று மாதங்கள் பெங்களூர் சென்று ஜூஸ் பேக்டரில் கூலி வேலை செய்ய அந்த கிராமத்தை சேர்ந்த பலர் போவார்கள்.
இதில் இரண்டு ஜாதிக்காரர்களுமே போகிறார்கள். அந்த வகையில் ஹரிசங்கர் ,சங்கீதாவுமே வேலைக்கு செல்கிறார்கள். அங்கு கன்னட அமைப்பை சேர்ந்த புகழ் மகேந்திரனுக்கும் சங்கீதாவுக்கும் சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் புகழை, சங்கீதா அடித்து விடுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர், தமிழகத்தில் இருந்து வந்த கூலித் தொழிலாளர்கள் வேலை செய்யவே கூடாது என்று எதிர்க்கிறார்கள்.
அதற்கு பின் என்ன நடக்கிறது? சங்கீதா- ஹரி காதல் கை கூடியதா? ஜாதி கலவரம் முடிவுக்கு வந்ததா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் திருவண்ணாமலை நடக்கும் ஒரு உண்மை காட்சியை மையமாக வைத்து இயக்குனர் எடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஹீரோவாக வரும் ஹரிசங்கர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவரை அடுத்து வரும் ஹீரோயினி சங்கீதா கல்யாண், கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.
அவர்களெல்லாம் எப்படி ஆடை அணிவார்கள், நடப்பார்கள், பேசுவார்கள் என்பதை எல்லாம் அவர் கண்முன் கொண்டு வந்து நிறுத்து இருக்கிறார். பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. கதைக்களம் நன்றாக இருக்கிறது. ஆனால், அதை கொஞ்சம் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் காட்டி இருக்கலாம். குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் கொடூரமான காட்சியை பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு இயக்குனர் காண்பித்து இருக்கிறார்.
இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத அளவிற்கு கொடுமைகளை காட்ட வேண்டும் என்று இயக்குனர் செய்திருக்கிறார். அதுவே ஒரு கட்டத்தில் வெறுப்பை ஏற்படுகிறது. ஜாதி மோதல்கள், தமிழர்- கன்னட மோதல் என அனைத்தையும் காண்பித்து விட்டு ஒற்றுமை பேசுகிறோம் என்று இயக்குனர் சொல்லி இருக்கும் விஷயம் தான் நெருடலாக இருக்கிறது. ஓருவரை அடி அடி என்று அடித்து விட்டு அவரே மருந்து போடுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. மொத்தத்தில் இந்த படம் ரொம்ப சுமாராக இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதைக்களம் நன்றாக இருக்கிறது
சமூக விழிப்புணர்வு படம்
பின்னணி இசை ஓகே
குறை:
இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்
கிளைமாக்ஸ் காட்சி
பாடல்கள் பெரிதாக கவரவில்லை
மொத்தத்தில் பராரி- பரிதவிப்பு