ஆண்டாள் கோவில் கருவறையில் அனுமதிக்கவில்லை என்று செய்தி பரவிய நிலையில் இளையராஜா போட்டுள்ள பதிவு
தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இசையமைப்பாளர் இளையராஜா போட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இளையராஜாவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பெரிய பெருமாள் சன்னதி, நந்தவனம், ஆண்டாள் சன்னதி ஆகியவற்றிற்கு சென்று இளையராஜா சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆண்டாள் கோவில் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை அங்குள்ள ஜீயர்களும், பக்தர்களும் தடுத்து நிறுத்தியதாக கூறப்பட்டது. அதாவது வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக கூறி இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்பட்டது. அதனால் கோவில் அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியே வந்த இளையராஜா அங்கிருந்து சாமி தரிசனம் செய்தார் என செய்திகள் வந்தன.
இளையராஜா வெளியேற்றப்பட்டாரா:
அதற்குப் பிறகு அங்குள்ள அர்ச்சகர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள் என்றும் செய்திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனால் இந்த சம்பவம் குறித்து இளையராஜா வருத்தம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை இணையத்தில் தெரிவித்து வந்தார்கள். அதோடு, கோவில் நிர்வாகம், ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இளையராஜா பதிவு:
இந்நிலையில், இது தொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாக பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்' என பதிவிட்டுள்ளார்.
நடந்த உண்மை:
அதாவது பொதுவாக ஆண்டாள் சன்னதியில் கருவறைக்கு முன் உள்ள அர்த்தமண்டபத்திற்கு வெளியே இருக்கும் வசந்த மண்டபத்தில் நின்றே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று இரவு, ஜீயர்களுடன் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றபோது, வசந்த மண்டபத்தை தாண்டி அர்த்தமண்டப வாசல் அருகே நின்று இருக்கிறார். அப்போது அர்ச்சகர் ஜீயரிடம், வசந்த மண்டபத்தில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதை தான் சின்ன ஜீயர் இளையராஜாவிடம் கூறியதும், அவர் அர்த்த மண்டப வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 16, 2024
கோவில் நிர்வாகம் விளக்கம்:
ஆனால், இளையராஜா அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக விளக்கம் அளித்த ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், 'ஆண்டாள் கோவிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் தரிசித்துவிட்டு மனநிறையுடன் சென்றார் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த செய்தி தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.