ஜெய் பீம் to வேட்டையன், இயக்குனர் டிஜே ஞானவேல் படங்களில் வரும் நீதிபதி சத்யதேவ் யார் தெரியுமா?- நீதிபதி சந்துரு சொன்ன தகவல்

By Rajkumar · 13/10/2024

இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் மற்றும் வேட்டையன் திரைப்படங்களில் வரும் நீதிபதி சத்ய தேவ் கதாபாத்திரம் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் 'ஜெய் பீம்'. இந்த படம் வெளியாகி சமூகத்தில் எக்கச்சக்க விவாதங்களை எழுப்பியிருந்தது. இந்தத் திரைப்படம் நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக வாதாடிய வழக்கு குறித்து எடுக்கப்பட்ட படம். மேலும், நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்தில் தான் நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது, இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் 'வேட்டையன்'. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்துள்ளனர். வேட்டைய படத்தின் முக்கிய கதாபாத்திரமான நீதிபதி சத்ய தேவாக அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். அதேபோல், நடிகர் சூர்யாவின் முயற்சியில் ஏழை எளிய மாணவர்கள் படிப்பதற்காக தொடங்கப்பட்டு இருக்கும் சட்டக் கல்லூரியில் நீதிபதி சந்துரு கௌரவ இயக்குனராக செயல்படுகிறார்.

சத்யதேவ் லா அகாடமி:

இந்த சட்டக் கல்லூரிக்கு 'சத்யதேவ் லா அகாடமி' என்று பெயரிட்டுள்ளனர். இந்த சட்டக் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் ‌ என்பது குறிப்பிடத்தக்கது. சத்யதேவ் என்பவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். இந்நிலையில் நீதிபதி சத்ய தேவ் குறித்து நீதிபதி சந்துரு ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் , ஓய்வு பெற்ற நீதிபதி சத்யதேவ் மிகவும் நேர்மையானவர். எப்போதும் நேரத்தை தவற விட மாட்டார். நேர்மைக்கு பெயர் போனவர். அறத்துடன் செயல்படுவார்.

நீதிபதி சந்துரு பேட்டி:

தனது மகனின் திருமணத்தின்போது கூட, காலையில் திருமணம் முடிந்ததும் மதியம் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டார் என்று கூற்றியுள்ளார். அதைத்தொடர்ந்து நீதிபதி சந்துரு வழக்கறிஞராக வாதாடிய நிகழ்வு குறித்து கூறியுள்ளார். அதில், மீனாட்சி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் ஒன்று எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் நடந்தது. அப்போது போக்குவரத்து இடையூறு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி காவல்துறை அந்தப் போராட்டத்திற்கு தடை விதித்தார்கள்.

நீதிபதி சந்துரு வாதாடிய வழக்கு:

அதனால் மீனாட்சி கல்லூரி ஆசிரியர்கள் இது தொடர்பாக வழக்கை தொடர்ந்தார்கள். அப்போது சத்யதேவ் தான் அந்த வழக்கிற்கு நீதிபதி. அன்றே எம்.ஜி.ஆர் அவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து மெரினா கடற்கரையில் போராட்டம் செய்து கொண்டிருந்தார். அப்போது வாதாடிய நான் நீதிபதி சத்ய தேவிடம், எம்.ஜி.ஆர் போராட்டத்தில் ஈடுபடும் போது போக்குவரத்து பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதா? கல்லூரி பேராசிரியர்கள் போராடினால் மட்டும் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் போக்குவரத்து இடையூறு எல்லாம் ஏற்படுமா என்று நான் வழக்கறிஞராக வாதாடினேன்.

நீதிபதி சத்யதேவின் நேர்மை :

அப்போது நீதிபதி சத்யதேவ் அவர்கள், என் வாதத்தை ஏற்றுக் கொண்டு பேராசிரியர்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தார் என்று நீதிபதி சந்துரு அவர்கள் கூறியுள்ளார். அதனால், ஜெய் பீம் படத்தில் சூர்யா நீதிமன்றத்தில் வாதாடும் காட்சியில் ஒரு பக்கம் சத்யதேவ் புகைப்படத்தையும், மற்றொரு பக்கம் வி ஆர் கிருஷ்ணய்யர் புகைப்படத்தையும் வைத்திருப்பார்கள். அந்தக் காட்சியில் அந்த புகைப்படங்கள் வைக்க வேண்டும் என்பது நீதிபதி சந்துருவின் யோசனை தான் என்றும் கூறியிருக்கிறார். இதுபோல், நீதிபதி சத்யதேவை முன்னிலைப்படுத்துவது அவர் மீது தான் வைத்திருக்கும் மரியாதை தான் காரணம் என்று நீதிபதி சந்துரு நெகிழ்ந்து கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full