“அகிப் பஷீருக்கு ஏன் வாய்ப்பு இல்லை?” - தேர்வுக்குழுவை கேள்வி கேட்ட இர்ஃபான் பதான்

“அகிப் பஷீருக்கு ஏன் வாய்ப்பு இல்லை?” - தேர்வுக்குழுவை கேள்வி கேட்ட இர்ஃபான் பதான்

By S.Dhilip Kumar · 29/7/2026

இந்திய அணியின் வீரர்கள் தேர்வு செய்யப்படும் விதம் குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக, உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் வேகப்பந்துவீச்சாளர் அகிப் பஷீருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தேர்வு நடைமுறையில் எனக்கு லாஜிக் தெரியவில்லை”

“அகிப் பஷீர் தேர்வு செய்யப்படாததற்கு என்னிடம் உண்மையாகவே எந்த தர்க்கரீதியான பதிலும் இல்லை. தேர்வு நடைமுறையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்று பதான் கூறினார். பும்ரா இல்லாத நேரத்தில் முகமது சிராஜ்தான் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் என்று குறிப்பிட்ட பதான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இல்லாத ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிராஜை விளையாட வைத்ததன் அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். “உள்ளூர் கிரிக்கெட் செயல்பாடுகள் முக்கியம் என்றால், அகிப் பஷீருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? அவரை அந்த போட்டியில் பரிசோதித்திருக்கலாம்,” என்றார்.

ரஞ்சி டிராபி செயல்பாட்டை சுட்டிக்காட்டிய பதான்

அகிப் பஷீர் ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் கே.எல். ராகுல் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களை சிரமப்படுத்தியதை பதான் நினைவுபடுத்தினார். “வேகம் மட்டுமே முக்கியம் என்று பேசுகிறார்கள். ஆனால் ஒரு பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனை எவ்வளவு சிரமப்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம். அகிப் தொடர்ந்து சிறப்பாக அதை செய்துள்ளார்,” என்று கூறினார்.

ஐபிஎல்லில் அகிப் 133-135 கி.மீ வேகத்தில் பந்துவீசியதாகவும், அந்த வேகத்தில் பந்தை தாமதமாக ஸ்விங் செய்யும் திறன் அவரிடம் இருப்பதாகவும் பதான் தெரிவித்தார். மேலும், 8 அல்லது 9-வது இடத்தில் பேட்டிங் செய்யும் திறனும் அவருக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.

“வேகப்பந்துவீச்சாளரின் உச்சத்தை தவறவிடாதீர்கள்”

வேகப்பந்துவீச்சாளர்கள் பொதுவாக 27 முதல் 32 வயதுக்குள் உச்சத்தை அடைவார்கள் என்று கூறிய பதான், நல்ல ரிதத்தில் இருக்கும் பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு வழங்குவதை தாமதிக்கக்கூடாது என்றார். அதே நேரத்தில், 33 வயதான சரன்ஷ் ஜெயினுக்கு உள்ளூர் கிரிக்கெட் செயல்பாடுகளின் அடிப்படையில் வாய்ப்பு கிடைத்திருப்பதை வரவேற்ற பதான், அது உள்ளூர் வீரர்களுக்கு நல்ல செய்தி என்றும் கூறினார்.

“சரன்ஷ் ஜெயினுக்கு தொடர்ந்து பல ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது பாராட்டுக்குரியது. ஆனால் அகிப் பஷீருக்கு என்ன தவறு? அவரும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், நல்ல பேக்கப் வேகப்பந்துவீச்சாளர் எப்போதும் தேவை,” என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full