தமிழ்நாட்டில் ஏன் இந்த அவலம்?- த.வெ.க மாநாட்டை தொகுத்து வழங்கிய ஆங்கரை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்
தவெக மாநாட்டை தொகுத்து வழங்கிய ஆங்கரை ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்திருக்கும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிரபல நடிகர் விஜய்,கடந்த பிப்ரவரி மாதம் தான் தனது கட்சியின் பெயர் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று அறிவித்திருந்தார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் அவர்கள் போட்டியிட இருக்கும் நிலையில், சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்ரவாண்டி தொகுதியில் உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற்றது.
பிரம்மாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் விஜய்க்கு ஈகுவலாக வைரலாகி, விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார் தொகுப்பாளர் துர்கா தேவி. 'தளபதி இதோ வந்துவிட்டார்… அதோ வந்துவிட்டார்' என ஆரவாரத்தோடு துர்கா தேவி தொகுத்து வழங்கியது, மீம்ஸ்களாக இணையம் எங்கும் வைரலாகி இருந்தது. அதே நேரத்தில், துர்காவுக்கு ஆதரவாகவும் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் மற்றும் தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில், தொகுப்பாளனி துர்கா தேவி குறித்து பதிவிட்டுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு:
அதில், நேற்று தவெக மாநாடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரைப் பற்றி, அந்த நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோதே என்னிடம் சிலர் சொன்னார்கள். "கீச்சுக் கீச்சென்று ஒரு பெண் கத்திக்கொண்டிருக்கிறாள். வேறு யாரையாவது ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளரை அமர்த்தி நேர்த்தியாக செய்திருக்கலாம்" என்பது போன்றக் கருத்துகளை என்னிடம் சொன்னார்கள். நான் வேறொரு அலுவலில் இருந்ததால் அதை உடனே காணமுடியவில்லை. சற்று நேரம் கழித்து ஒரு இடைவெளி கிடைத்தபோது நேரடி ஒளிபரப்பைக் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்.
தொகுப்பாளினி துர்கா தேவி குறித்து:
.அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அவர்தான் சரியானத் தேர்வு என்று தெரிந்தது. அவர்தான் என்பதைவிட, அவரைப்போல அந்த இயக்கத்தின் உறுப்பினராகவும், அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராகவும் இருந்தால்தான் இதைப்போன்ற அரசியல் கொள்கை விளக்கக் கூட்டத்துக்குப் பொருத்தமாயிருக்கும். அவர் வெறுமனே எழுதிவைத்ததை உதட்டிலிருந்துப் படிக்காமல் உணர்வுகளோடு உச்சஸ்தாயியில் முழங்கிக்கொண்டிருந்தார். இது தொழில்ரீதியானத் தொகுப்பாளர்களிடம் கிடைக்காது. இவர்தான் சரி!
ஜேம்ஸ் வசந்தன் செய்த விமர்சனம் :
ஆனால், அவர் 'ல'கரத்தைக் சிதைத்துக்கொண்டிருந்தார் என்பதையும் கண்டேன். தமிழ்நாட்டில் ஏன் இந்த அவலம்? இங்லிஷைக் கொலைசெய்கிற இங்லிஷ் பேச்சாளர்களை மேலை நாடுகளில் கண்டதேயில்லை. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் அவரவர் மொழியைக் கொலைசெய்கிறத் தொகுப்பாளர்களைக் கேள்விப்பட்டதில்லை. ஏன் தமிழுக்கு மட்டும் இந்தக் கொடுமை? எங்கு பிரச்சனை? எப்போது இந்த இழிநிலை மாறும்? என்று தொகுப்பாளனி துர்கா தேவி குறித்து பதிவிட்டுள்ளார்.
விமர்சனங்கள் குறித்து துர்கா தேவி சொன்னது:
இப்படி பலரும் துர்கா தேவியை விமர்சித்து வரும் நிலையில் அவர், இந்த விமர்சனங்களை எல்லாம் நான் எதிர்பார்த்ததுதான். நான் என்னோட பெஸ்ட்ட கொடுத்தேன். என்னோட உணர்ச்சிவசமான குரல் உங்கள டிஸ்டர்ப் செஞ்சு இருந்தா மன்னிச்சிடுங்க. இந்த இடத்துக்கு நான் சாதாரணமாக வரல, எத்தனையோ டிவி ஆங்கரை தாண்டி ஒரு சாதாரண பொண்ணா, உங்களல ஒருத்தியா நான் போய் நின்னதுக்கு நீங்க எனக்கு ஆதரவாக இருந்து இருக்கனும். உங்க வீட்டு அக்காவா இருந்தா ஆதரவு தந்து இருக்க மாட்டீங்களா. அந்த ஆதங்கம் தான் எனக்கு என்ற துர்கா தேவி கூறியுள்ளார்.