விஜய் தலைவர் இல்லை, அரசியல் நடிகர் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் அதிரடி பதிவு

By subhashini · 24/2/2026

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதை அடுத்து சில வாரங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கட்சி தொண்டர்கள், உறுப்பினர்கள் எல்லோருமே கொண்டாடி இருந்தார்கள்.இதை அடுத்து விஜய் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் பற்றி ஜேம்ஸ் வசந்தன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நடிகர் விஜய் தேர்தலுக்கு முன் இப்படி பல நிகழ்வுகள் நடத்தவேண்டும். அப்போதுதான் அவர் எவ்வளவு "வெறுமை" "போலி" என்பது அவர் ரசிகர்களுக்கே புரியவரும். அவர் நடிகராக மட்டுமே இருக்கும் காலத்திலேயே அவர் ஒரு Buddu (ஹிந்திச் சொல்) என்பது வெட்டவெளிச்சம். அது ஒன்றும் கேவலமில்லை. ஒரு நடிகர் அறிவாளியாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்படுவதைப் புரிந்துகொண்டு செய்யக்கூடிய அளவுக்கு ஆற்றல் இருந்தால் போதும். அது மக்களுக்குப் பிடித்துவிட்டால் அவர் நட்சந்திரந்தான்.

ஜேம்ஸ் வசந்தன் பதிவு:

அங்கு அறிவைக்கொண்டு அந்தஸ்து இல்லை. சில இயல்பானத் தன்மைகளே போதும். ஆனால் பொதுவாழ்க்கை சிந்தனை மற்றும் உணர்வு அடிப்படையிலானது. பிறர் இடத்தில் இருந்து அவர்கள் நிலையில் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை உணரக்கூடிய சுபாவம்தான் இதன் அடிப்படை. அந்த உணர்வு உந்திதான் பொதுவாழ்க்கையைக் குறித்துப் பேச, செயல்பட வைக்கும். நம்மை அவர்களோடு சேர்ந்து நிற்கவைக்கும். அவர்களுக்காகக் குரல்கொடுக்க வைக்கும். போராட வைக்கும். தன் நிலை மறந்து, தன் சுகம் மறந்து, பிறர் நலன் மேலோங்கி அதற்கான வழிகளைத் தேடவைக்கும்.


கடுமையான விமர்சனம்:

இந்த உணர்வு வரும்போது, அதை யாரும் தடுக்கவோ, தடைசெய்யவோ முடியாது. பேசிப்பேசி, செயல்வீரனாகி, பலரைப் பின்பற்றச் செய்து, தலைவனாக உருவாக்கும். நடிகர் விஜய், நேற்றைய வேலூர் கூட்டம் வரை, எழுதிக்கொடுத்து, இயக்கப்பட்டு, ஒப்பிக்கிற வெறுமையான நடிகர் விஜய்யாகவே இருப்பதுதான் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.
இவர் தோன்றிய தலைவர் அல்ல; தோற்றுவிக்கப்பட்ட அரசியல் நடிகர். ஒப்பனை செய்து, மக்கள் முன் நிறுத்திவைக்கப்படும் எந்திரத் தலைவர், வெறும் நடிகர் என்பது மீண்டும் மீண்டும் அவர் வாயாலேயே நிரூபிக்கப்படுகிறது. நேற்று அவர் நடத்திய சிறுபிள்ளைத்தனமான உத்திகள் எல்லாம் அவர் மீது பரிதாபத்தையே வரவழைக்கிறது.

விஜய் அரசியல் :

தன்னுடைய intellectually challenged ரசிகர்களை கூட்டிவைத்துக் கொண்டு "என்னை நம்புவிங்களா? இல்ல, ஸ்டாலின் சாரை நம்புவிங்களா?" என்று கேட்டு, அவர்களுடைய ஆரவாரத்தைக் கண்டு, "இதுதான் proof!" என்று சொல்லி ஆனந்தப்பட்டுக் கொள்ளும் இந்த குழந்தை அறிவை என்ன சொல்வது?
ஒரு அறிவார்ந்த மாநிலமாக பல்வேறு துறைகளிலும் சாதித்துக்கொண்டிருக்கும் இளைஞர் ஒருபுறமும், சாதிக்கத் துடிக்கிற இளைஞர் ஒருபுறமும், கல்வியின் அருமையை பல்வேறு விதங்களில் இளையதலைமுறைக்குப் புரியவைத்துக் கொண்டிருக்கும் அறிவார்ந்த மூத்தத் தலைமுறை ஒருபுறமும் என அசுரவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிற தமிழ்நாடு, இப்படிச் சில பேதைகளையும் கொண்டிருக்கிறதே என்கிற அச்சமும், கவலையும் நம்மை சூழ்வதைத் தவிர்க்க இயலவில்லை என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full