மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதனால் படக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று படத்தை பயங்கரமாக ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இசை வெளியீட்டு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் செய்த செயலை ஜேம்ஸ் வசந்தன் பாராட்டி இருக்கிறார்.

தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியர் ஜேம்ஸ் வசந்தன். மேலும், சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானர். அதன் பின்னர் ஒரு சில படங்களுக்கு இசையமைத்து உள்ளார். சமீப காலமாக இவர் இளையராஜா குறித்து கடுமையாக விமரிசித்து வருகிறார். ஆனால், ஏ ஆர் ரஹ்மான் பற்றி மட்டும் அடிக்கடி பாராட்டி பதிவுகளை போட்டு வருகிறார். அந்த வகையில் ஏ ஆர் ரஹ்மானை புகழ்ந்து மீண்டும் ஒரு பதிவை போட்டுள்ளார்.

Advertisement

பொன்னியின் செல்வன்-2 இசை வெளியீடு. பிரம்மாண்ட மேடை; தமிழ்த் திரைப்படத்தின் உச்சபட்ட நட்சத்திர, தொழில் நுட்பக் கலைஞர் கூடுகை; ரசிகர்கள் மயங்கிக் கேட்கிற அப்படத்தின் பாடல்களை நேரடியாகப் பாடுகிற பல்மொழி பின்னணிப் பாடகர்; பின்னணியில் அமர்க்களமான இசைக்கலைஞர் அணிவகுப்பு.இசைக்குழுவைக் கூர்ந்து நோக்கினால் வசீகரமான இளைஞர் பெரும்பாலானோர். முகத்தில் அந்த இசையின் அடிப்படை புரிந்த யதார்த்தம்; மிடுக்கான உடை என அவர்களைப் பார்க்க பெருமிதமாய் இருக்கிறது.

இருக்காதா பின்னே? இவர்கள் மட்டும் ARR என்கிற மனிதாபிமானமிக்க அந்த அற்புத இசைக்கலைஞனின் கண்களில் படாமல் போயிருந்தால்..? இன்று சமூக அந்தஸ்தின் உச்சத்தில் இருக்கும் மேல்தட்டு மக்களின் பிள்ளைகளைப் போலவே இருக்கிற இவர்களில் பெரும்பாலானோர் கோடம்பாக்கம் MGR மாநகராட்சிப் பள்ளி முன்னாள் மாணவர். ஆம், 10-15 வருடங்களுக்கு முன் அன்றாட உணவுக்கும், தேவைகளுக்கும் போராடும் கீழ்மட்டக் குடும்பத்துப் பிள்ளைகள்.

Advertisement

ரஹ்மான் தன் வீட்டுக்கு அருகிலுள்ள அந்தப் பள்ளிப் பிள்ளைகளில் இசை நாட்டமுள்ள 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உலகின் தலைசிறந்த இசை ஆசிரியர்களை வைத்து இசை பயிற்றுவித்து, சர்வதேச தரத்துக்கு அவர்கள் தரத்தை உயர்த்தி இன்று அவர்களை இந்த சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்க்கிறார். இன்று இவர்கள் தங்கள் திறமையைக் கொண்டு பல இலட்சங்களை ஈட்டும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். ரஹ்மானுடைய எல்லா பெரும் இசை நிகழ்ச்சிகளிலும் இவர்களைக் காணலாம்.

Advertisement

இந்தியா மட்டுமன்றி வெளி நாடுகளிலும் இவர்கள் சென்று அவர்களுடைய மேற்கத்திய இசைக்கருவியை அவர்கள் வியக்கும் வண்ணம் வாசித்துப் பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெறுகின்றனர். தன்னை வளர்த்த சமூகத்துக்குக் கைம்மாறு செய்பவன்தான் பொறுப்புள்ள, போற்றத்தக்க மனிதன்’ என்று ஏ ஆர் ரஹ்மானை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் பாடல்கள் குறித்தும் ஏ ஆர் ரஹ்மானை ஜேம்ஸ் வசந்தன் பாராட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement