'ஹாலிவுட்டில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் முதலில் நினைப்பது அப்பா விஜயைத்தான்!' - மனம் திறந்த ஜேசன் சஞ்சய்

'ஹாலிவுட்டில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் முதலில் நினைப்பது அப்பா விஜயைத்தான்!' - மனம் திறந்த ஜேசன் சஞ்சய்

By S.Dhilip Kumar · 31/7/2026

1.இயக்குநராக புதிய இன்னிங்ஸ்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நடிகராக அல்லாமல் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'சிக்மா' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அவர், சமீபத்திய பேட்டியில் தனது சினிமா பயணம், தந்தை விஜய், சிறுவயது கனவுகள் மற்றும் இசை மீதான காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

2."முதலில் நினைப்பது அப்பா விஜயைத்தான்"

"ஒருவேளை ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் என்னை அழைத்து படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்தால், அந்தப் படத்தில் நடிக்க என் மனதில் முதலில் தோன்றும் இந்திய நடிகர் என் அப்பா விஜய்தான்," என்று ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். தந்தையின் நடிப்பு திறன் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையையும் மரியாதையையும் இந்த ஒரு பதிலே வெளிப்படுத்துகிறது.

3.பைலட் கனவில் இருந்து சினிமா வரை

சிறுவயதில் சினிமாவை விட பைலட்டாக வேண்டும் என்பதே தனது கனவு என்றும், பின்னர் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாக ஜேசன் சஞ்சய் கூறினார். ஆனால் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த காலகட்டத்தில்தான் சினிமா மீது தீவிர ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், கதை எழுதுவதும், கதை சொல்வதும் தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களாக மாறியதாகவும் தெரிவித்தார்.

4.லைகாவில் கிடைத்த முதல் வாய்ப்பு

நண்பர்களுடன் இணைந்து குறும்படங்கள் எடுத்த அனுபவத்திற்குப் பிறகு, லைகா நிறுவனத்தின் தமிழ் குமரனை சந்தித்து ஒரு கதையைச் சொல்லியதாகவும், கருத்து கேட்கவே சென்ற நிலையில் அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் உடனே படமாக்க முடிவு செய்யப்பட்டதாகவும் ஜேசன் சஞ்சய் நினைவுகூர்ந்தார். அதன்பிறகே 'சிக்மா' படத்தின் முழு திரைக்கதை உருவானதாக அவர் கூறினார்.

5.யுவன் மீது தனி பாசம்

'சிக்மா' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இரு மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் தமனை இசையமைப்பாளராக தேர்வு செய்ததாக ஜேசன் சஞ்சய் தெரிவித்தார். அதே நேரத்தில், தனது மிகவும் விருப்பமான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்றும், "என்னைப் போன்ற அறிமுக இயக்குநர்களுக்கு யுவன் சாரின் இசை மிகப்பெரிய ஊக்கம். அவர் பாடல்கள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. இந்தப் படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்," என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

6.தனக்கென ஒரு பாதையை உருவாக்கும் முயற்சி

நடிகர் விஜய்யின் மகன் என்ற அடையாளத்துடன் திரையுலகிற்கு வந்திருந்தாலும், இயக்குநராக தனது சொந்த அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஜேசன் சஞ்சய் உறுதியாக இருக்கிறார். அவரது முதல் படமான 'சிக்மா' மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நேர்மையான பேட்டி படத்தின் மீதான ஆர்வத்தையும் மேலும் உயர்த்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full