அதிரடியாக 'புஷ்பா 2' படத்தில் நீக்கப்பட்ட 19 நிமிட காட்சிகள், காரணம் என்ன தெரியுமா?
'புஷ்பா 2' திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி குறித்து தான் செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.
மேலும், இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திரா மாநிலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
புஷ்பா 2 :
அதனைத் தொடர்ந்து , இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில வருடங்களாகவே புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. அந்த தாமதத்துக்கு காரணம் அல்லு அர்ஜுனுக்கும் இயக்குனர் சுகுமாருக்கும் இடையே இருந்த பிரச்சனை தான் என தகவல்கள் பரவின. ஒரு வழியாக இப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பு :
மேலும், இப்படம் வழக்கமான தெலுங்கு மசாலா படம் போல்தான் இருக்கிறது. அல்லு அர்ஜுன் மட்டும் தான் இந்தப் படத்தை ஒட்டுமொத்தமாக தோலில் சுமக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்திருந்தது. அதே சமயம் முதல் பாகத்தில் பாடல் எல்லாம் அருமையாக இருந்தன. ஆனால், இந்த படத்தில் அப்படி இல்லை என்று சிலர் கருத்தை முன் வைத்திருந்தார்கள். இருந்தாலும் முதல் இரண்டு நாட்களில் இப்படம் உலக அளவில் ரூபாய் 405 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் புஷ்பா 2 :
இந்நிலையில், தற்போது சவுதி அரேபியாவில் திரையிடப்பட்டுள்ள 'புஷ்பா 2' படத்தில் வரும் 19 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக புஷ்பா- 2 படத்தின் நீளம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகும். ஆனால், இந்தப் படம் சவுதி அரேபியாவில் மட்டும் மூணு மணி நேரம் ஒரு நிமிடம் மட்டுமே திரையிடப்பட்டு வருகிறது. இந்தத் தகவல், சவுதி அரேபியாவில் வாழும் அல்லு அர்ஜுன் ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நீக்கப்பட்ட காட்சி எது :
அதாவது, புஷ்பா 2 திரைப்படத்தில் 'கங்கம்மா ஜத்தாரா' (குலதெய்வ வழிபாட்டுக்கான காட்சிகள்) இடம்பெற்றிருக்கிறது. தற்போது இந்த காட்சிகளை தான் சவுதி அரேபியா அரசு புஷ்பா 2 திரைப்படத்திலிருந்துநீக்க உத்தரவிட்டிருக்கிறது. சவுதி அரேபியாவின் மதம் மற்றும் கலாச்சார அடிப்படையில் இந்தக் காட்சிகளை சவுதி அரேபியா அரசின் சென்சார் அமைப்பு நீக்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால், அந்தப் காட்சியில் வரும் அல்லு அர்ஜுனின் நடிப்புதான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.