"ரோஹித் சர்மா ஒரு ஜாம்பவான்... அவருடைய ஜெர்சியை வாங்க வேண்டும் என்பதுதான் என் ஆசை!" - நெகிழ்ந்த ஜோஸ் பட்லர்
"ரோஹித் சர்மா ஒரு ஜாம்பவான்... அவருடைய ஜெர்சியை வாங்க வேண்டும் என்பதுதான் என் ஆசை!" - நெகிழ்ந்த ஜோஸ் பட்லர்
ரோஹித்துக்கு ஜோஸ் பட்லர் புகழாரம்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் தலைமைத்துவம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களின் மரியாதையை பெற்றுள்ளது. அந்த வரிசையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லரும், ரோஹித் சர்மா மீது தனக்குள்ள மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். ரோஹித் சர்மாவை தனது நீண்டகால விருப்பமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக குறிப்பிட்ட பட்லர், அவரது பேட்டிங் பாணி மற்றும் கேப்டன்சி தன்னை எப்போதும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
"அவரின் கேப்டன்சியில் விளையாடியது மறக்க முடியாது"
ரோஹித் சர்மாவுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாடிய அனுபவத்தை நினைவுகூர்ந்த பட்லர், "ரோஹித் சர்மா நீண்ட காலமாக எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர். அவர் பேட்டிங் செய்யும் விதம், அவரது ஸ்டைல், ஆட்டத்தை அணுகும் முறை என அனைத்தையும் நான் ரசிப்பேன். நான் கேப்டனாக இருந்தபோதும், அவருடைய தலைமைத்துவத்தை கவனித்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரது தலைமையின் கீழ் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்," என்று கூறினார்.
"ரோஹித்தின் ஜெர்சி வேண்டும் என்பதே என் ஆசை"
ரோஹித் சர்மாவின் கையெழுத்துடன் கூடிய ஜெர்சியை பெற்ற சம்பவத்தையும் பட்லர் பகிர்ந்து கொண்டார். "ரோஹித் சர்மா ஒரு உண்மையான ஜாம்பவான். தற்போது இருக்கும் வீரர்களில் அவருடைய ஜெர்சியை மட்டுமே நான் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒருநாள் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது,
'உங்களுடைய ஜெர்சியை எனக்கு தர முடியுமா?' என்று கேட்டேன். உடனே அவர் சம்மதித்தார். அதுமட்டுமல்லாமல், தனது கையெழுத்துடன் ஒரு அழகான வாழ்த்து செய்தியையும் எழுதி கொடுத்தார். அது எனக்கு மிகவும் சிறப்பான நினைவாக இருக்கும்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எல்லைகளை தாண்டிய மரியாதை
கிரிக்கெட்டில் இந்தியா - இங்கிலாந்து போட்டிகள் எப்போதும் கடுமையான போட்டியாக இருந்தாலும், வீரர்களுக்கிடையேயான பரஸ்பர மரியாதை ரசிகர்களை வியக்க வைக்கிறது. எதிரணி வீரராக இருந்தாலும், ரோஹித் சர்மாவின் திறமை, தலைமைத்துவம் மற்றும் களத்திலும், களத்திற்கு வெளியிலும் அவர் காட்டும் பணிவு ஆகியவை உலகின் முன்னணி வீரர்களின் மரியாதையை பெற்றிருக்கின்றன. ஜோஸ் பட்லரின் இந்த பாராட்டு, ரோஹித் சர்மா வெறும் இந்திய ரசிகர்களின் ஹீரோ மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மதிக்கும் ஒரு ஜாம்பவான் என்பதையும் மீண்டும் நிரூபித்துள்ளது.