"ரோஹித் சர்மாவின் ஜெர்சியை கேட்கவே எனக்கு பதற்றமாக இருந்தது!" - நெகிழ்ந்த ஜோஸ் பட்லர்
"ரோஹித் சர்மாவின் ஜெர்சியை கேட்கவே எனக்கு பதற்றமாக இருந்தது!" - நெகிழ்ந்த ஜோஸ் பட்லர்
ரோஹித் மீது தனி மரியாதை
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது உலக கிரிக்கெட் வீரர்கள் வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லரும் ஒருவர். சமீபத்தில் ரோஹித் சர்மாவின் கையெழுத்துடன் கூடிய ஜெர்சியை பெற்ற சம்பவத்தை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
"அவரது ஜெர்சிதான் எனக்கு வேண்டும்"
Love for Cricket நிகழ்ச்சியில் பேசிய பட்லர், பொதுவாக மற்ற வீரர்களின் ஜெர்சியை சேகரிக்கும் பழக்கம் தனக்கு இல்லை என்றாலும், ரோஹித் சர்மாவின் ஜெர்சியை மட்டும் நீண்ட காலமாக வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக தெரிவித்தார்.
"நான் பொதுவாக ஜெர்சி மாற்றிக்கொள்ளும் பழக்கம் அதிகம் இல்லை. ஆனால் சில வீரர்களின் ஜெர்சியை மட்டும் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதில் ரோஹித் சர்மாவின் ஜெர்சி முக்கியமான ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பே டாஸ் நேரத்தில் அவரிடம் கேட்டிருந்தேன். போட்டி முடிந்த பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். ஆனால் அப்போது அது நடக்கவில்லை," என்றார்.
பும்ரா காரணமாக வந்த தைரியம்
இந்த முறை அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று முடிவு செய்ததற்கான காரணத்தையும் பட்லர் பகிர்ந்தார். "லியம் டாசன், ஜஸ்பிரித் பும்ராவின் ஜெர்சியை வாங்கப் போவதாக கூறினார். 'அவர் பும்ராதானே' என்று அவர் சொன்னதும், நானும் ரோஹித்திடம் மீண்டும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது விளையாடும் வீரர்களில் அவருடைய ஜெர்சி மட்டும்தான் என்னிடம் இல்லை. அதுதான் எனக்கு மிகவும் வேண்டியது," என்று கூறினார்.
"ரோஹித்திடம் கேட்கவே பதற்றமாக இருந்தது"
ரோஹித் சர்மாவிடம் ஜெர்சி கேட்ட தருணத்தை நினைவுகூர்ந்த பட்லர், "ரோஹித் சர்மா ஒரு உண்மையான ஜாம்பவான். அவரிடம் ஜெர்சி கேட்கவே எனக்கு பதற்றமாக இருந்தது. மரியாதை குறைவாக நடந்துகொண்டதாக அவர் நினைத்துவிடக் கூடாது என்ற பயம் இருந்தது. அந்த நேரத்தில் அவர் மிகவும் முக்கியமான தொலைபேசி அழைப்பில் பேசிக்கொண்டிருந்தார்," என்றார்.
ஒரே நொடியில் மனதை வென்ற ரோஹித்
அந்த சூழ்நிலையிலும் ரோஹித் சர்மா நடந்து கொண்ட விதம் தன்னை நெகிழ்ச்சியடைய வைத்ததாக பட்லர் தெரிவித்தார். "இந்திய அணி மேலாளர் ஏற்கனவே என்னுடைய ஜெர்சியை ரோஹித்துக்காக கேட்டிருந்தார். அதைக் கொடுக்க இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றேன். அவர் அங்கு இல்லை. பின்னர் அவர் மைதானத்தில் பேட்டி கொடுத்து கொண்டிருப்பதை அறிந்தேன். அதனால் காத்திருந்தேன்.
இறுதியாக அவர் போனில் பேசிக்கொண்டிருந்தபோது, தைரியமாக ஜெர்சி கேட்டேன். உடனே 'சாரி' என்று சொல்லி போனை வைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அதோடு தனது கையெழுத்துடன் அழகான வாழ்த்து செய்தியையும் எழுதி கொடுத்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் சிறப்பான நினைவாக இருக்கும்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ரோஹித்தின் பண்புக்கு உலகம் தரும் மரியாதை
கிரிக்கெட் மைதானத்தில் சாதனைகள் படைத்த ரோஹித் சர்மா, மைதானத்திற்கு வெளியேயும் தனது எளிமை மற்றும் பணிவான குணத்தால் எதிரணி வீரர்களின் மனதையும் வென்று வருகிறார். ஜோஸ் பட்லரின் இந்த அனுபவம், ரோஹித் சர்மா உலக கிரிக்கெட்டில் ஏன் மிகவும் மதிக்கப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.