நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கடைசி விவசாயி படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிகண்டன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் பற்றியும், அவர்கள் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அப்பாவித்தனமான விவசாயி என்பதால் நல்லாண்டி இந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி போய் விட்டார். படத்தில் அவருடைய பேச்சும், நடை எல்லாமே அருமையாக இருந்தது. மேலும், படத்தில் பல பாரம்பரிய முறைகளை காண்பித்திருக்கிறார்கள்.

மண்பானை செய்வதில் தொடங்கி, அரிசி, திருவிழாவுக்கான இசைக்கருவிகள் என அனைத்து விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. படத்தில் இயற்கையான முறையில் விவசாயம், காலப்போக்கில் அது செயற்கை ரசாயன உரங்களாக மாறியது,ரசாயன உரங்களை ஏற்காமல் இயற்கை விவசாயத்தை பயன்படுத்துபவர்கள் என பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைக்கிறது. விவசாயி உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையிலும் இந்த படம் உள்ளது என்று சொல்லலாம்.

Advertisement

நல்லாண்டி குடும்பத்தினர் அளித்த பேட்டி:

மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நல்லாண்டி. ஆனால், அவர் இந்த படம் வெளிவருவதற்கு முன்பே இறந்து விட்டார். இந்நிலையில் நல்லாண்டி பற்றியும் நல்லாண்டி குடும்பத்தைப் பற்றியும் பிரபல சேனல் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது. அதில் நல்லாண்டி குடும்பத்தினர் கூறியிருப்பது, கடைசி விவசாயி படத்தை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இவர் இப்படி நடிப்பார் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த படத்தை பார்க்க அவர் இல்லை என்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது.

நல்லாண்டி செய்த வேலைகள்:

என் அப்பா விவசாயம் மற்றும் 100 நாள் வேலை செய்வார். இது இரண்டு மட்டும் தான் அவருக்கு தெரியும். படத்தில் காண்பித்திருப்பது போல அவர் மிகவும் அப்பாவி. அவருடைய நிஜ வாழ்க்கையை தான் படத்தில் காண்பித்திருக்கிறார்கள். என் அப்பாவிற்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது எப்படி என்றால், ஒரு நாள் அவர் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கடைசி விவசாயி படக்குழுவினர் படத்தில் நடிப்பதற்காக ஆட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தான் என் அப்பாவை அவர்களுக்கு தெரிந்தது. அதற்கு பிறகு என் அப்பாவிடம் படத்தில் நடிப்பது குறித்து பேசினார்கள்.

Advertisement

நல்லாண்டி படத்தில் நடித்த அனுபவம்:

அவரும் சரி என்று சம்மதித்தார். அதற்கு பிறகு தான் கடைசி விவசாயி படத்தில் என் அப்பா நடித்தார். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் படக்குழுவினர் என்னை நன்றாக கவனித்தார்கள். என்னுடைய தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்து வைத்திருக்கிறார்கள் என்று பெருமையாக சொல்வார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் தன் மகனைப் போலவே நினைத்து பார்த்து சந்தோஷப்படுவார். ஆனால், அவர் இந்த தருணத்தில் இல்லாமல் இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. படம் முடிந்த பிறகு படத்தை போட்டுக் காண்பித்தார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர் இப்படி எல்லாம் நடிப்பாரா? என்று கூட எங்களுக்கு தெரியாது.

Advertisement

நல்லாண்டியின் கடைசி நிமிடம்:

படத்தில் அவர் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லணும். பின் படம் எப்போது வரும் என்று கேட்டோம். இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடும் என்றார்கள் அந்த சமயத்தில்தான் கொரோனா வந்ததால் படம் தள்ளிப்போனது. பிறகு அப்பாவும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவர் இறந்ததற்கு பிறகு தான் இந்த படம் வந்தது. அவர் இல்லை என்றாலும் இந்த படத்தின் மூலம் அவர் எல்லோரிடமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் பெருமையாக இருக்கிறது. படத்தை பார்த்து எல்லோரும் அப்பாவைப் பற்றி விசாரித்தார்கள். நல்லாண்டி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போதும், இறந்து போன போதும் படக்குழுவினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள் என்று நல்லாண்டி குடும்பத்தார் கூறி இருக்கிறார்கள்.

Advertisement