'என் அப்பா உண்மையான விவசாயி' - மறைந்த தனது தந்தைக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து நல்லாண்டியின் மகள் உருக்கம்.

By Arun · 25/8/2023

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை கடைசி விவசாயி திரைப்படம் வென்று இருக்கு நிலையில் இதையெல்லாம் பார்க்காமலேயே இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டார் படத்தின் நாயகன் நல்லாண்டி. கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருது பட்டியலில் 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் இடம்பெறவுள்ளன. தற்போது இந்தப் படத்துக்கு சிறந்த நடனம், சிறந்த சண்டைபயிற்சி, சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தமிழில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த நல்லாண்டி தாத்தாவிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் கடைசி விவசாயி படத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பார்க்க நல்லாண்டி உயிரோடு இல்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்.

இப்படி ஒரு நிலையில் தனது தந்தைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறித்து பேசியுள்ள நல்லாண்டியின் மகள் 'என்னுடைய அப்பா 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றிருந்தார். அவரை அந்த படத்தில் போலீசாக நடித்த செல்வம் தம்பி தான் கூட்டிக்கொண்டு போனார். மணிகண்டன் தம்பி உட்பட அனைவருமே நன்றாக பார்த்துக் கொண்டார்கள். எங்களுடைய அப்பா அழியாத சொத்து. என் அப்பா உண்மையான விவசாயி விவசாயத்திற்காக உழைத்தவர். இந்த விருது கிடைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் வாழ்ந்த வாழ்க்கை எண்ணி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

கடைசி விவசாயி படத்திற்கு இரண்டு தேசிய விருது கிடைத்திருக்கும் நிலையில் அதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள படத்தின் இயக்குனர் மணிகண்டன் 'மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கடைசி விவசாயி’ படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும் இந்நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசி விவசாயி படத்தில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்காதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டி அவர்களுக்கும், இப்படத்தினை உருவாக்க மிகப்பெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7 சிஎஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனங்களுக்கும், இந்தப் படத்தினை உருவாக்க உறுதுணையாகவும் இருந்து, சிறப்பாக நடித்தும் கொடுத்த விஜய் சேதுபதிக்கும், சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இதுபோல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full