கலையரசனின் 'ட்ரெண்டிங்' படம் பேமஸ் ஆனதா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

By subhashini · 18/7/2025

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கலையரசன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ட்ரெண்டிங். இந்த படத்தை இயக்குனர் சிவராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ராம் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கலையரசனுடன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் நடக்கும் விபரீதத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் கலையரசன், பிரியாலயா இருவருமே திருமணம் ஆகி சந்தோஷமான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். தங்களுடைய பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார்கள்.
இவர்களை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்கிறார்கள். youtube சேனல் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பெரிய பங்களா, வீடு, கார் என்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒருநாள் அவர்களுடைய youtube சேனல் முடக்கப்படுகிறது.

அதனால் அவர்களுடைய வருமானமும் நின்று விடுகிறது. பின் கடன் பிரச்சனையில் கலையரசன், பிரியாலயா ஜோடி சிக்கி கொள்கிறார்கள். அந்த சமயத்தில் தான் மர்மநபர் ஒருவர் இவர்களை தொடர்பு கொண்டு, தாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். அதில் வெற்றி பெற்றால் கோடி கணக்கில் பணம் தருவதாகவும் கூறுகிறார். அதோடு அந்த நிகழ்ச்சியை பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்றும் கண்டிஷன் போடுகிறார்கள்.

இதனால் கலையரசன்,பிரியாலயா இருவரும் பணத்திற்காக அந்த விளையாட்டுக்கு சம்மதம் சொல்கிறார்கள். அந்த போட்டி அவர்களுடைய வீட்டிலேயே நடக்கிறது. 7 நாட்கள் விளையாட வேண்டும் என்றும், கொடுக்கும் டாஸ்குகளில் வெற்றி பெற்றால் தான் பரிசு கிடைக்கும் என்றும், தோல்வி அடைந்தால் வெற்றி பெற்ற பரிசு தொகையை கொடுத்து விட வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்குப்பின் கலையரசன், பிரியாலயா இருவரும் போட்டியில் வெற்றி பெற்றார்களா? எதற்காக போட்டி நடந்தது? போட்டியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

படத்தில் ஹீரோவாக கலையரசன், ஹீரோயினி ஆக பிரியாலயா நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும்
இவர்களை சுற்றி தான் நடக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், உணவுப்பூர்வமான காட்சிகளை எல்லாம் மையமாக வைத்து இயக்குனர் படத்தை எடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கலையரசனின் உடைய நடிப்பு பாராட்டைப் பெற்றிருக்கிறது. மிக சரியான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார். அவருடைய வசனம், நடிப்பு என அனைத்தையுமே சிறப்பாக செய்து இருக்கிறார்.

இவரை அடுத்து படத்தில் வரும் பிரியாலயாவும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சொல்லப்போனால் இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இன்றைய காலத்தில் பேச வேண்டிய முக்கியமான கதையை தான் இயக்குனர் சிவராஜ் எடுத்திருக்கிறார். ட்ரெண்டிங் என்ற பெயரில் இளம் ஜோடிகள் சோசியல் மீடியாவில் செய்யும் வேலைகளையும், அதனால் அவர்கள் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதையும் தெளிவாக இயக்குனர் காண்பித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

ஒட்டுமொத்த படமும் ஒரே வீட்டுக்குள் நடக்கின்றது. அப்படி இருந்தாலுமே சலிப்பில்லாமல் சுவாரசியமாக இயக்குனர் படத்தை கொண்டு சென்று இருப்பது நன்றாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பணத்தின் மீது இருக்கும் ஆசையால் எப்படி எல்லாம் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதுவும் சோசியல் மீடியாவில் இருந்த மோகத்தால் என்னவெல்லாம் விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதை படத்தில் அழகாக காண்பித்திருக்கிறார். படத்தினுடைய ஒளிப்பதிவும், எடிட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால், கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் செயற்கை தனமாக இருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியில் அடுத்து என்ன நடக்கும் என்ற காட்சிகள் எல்லாம் யூகிக்க கூடிய அளவிற்கு தான் இருக்கிறது. முதல் பாதியில் படம் நன்றாக சென்றாலும் இரண்டாம் பாதியில் பொறுமையாக தான் செல்கிறது. இயக்குனர் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் விறுவிறுப்பை காண்பித்திருந்தால் படம் நன்றாக இருந்து இருக்கும். இன்னும் சில விஷயங்களை படத்தில் காண்பித்திருந்தால் படம் சுவாரசியமாக இருந்திருக்கும். மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.

நிறை:

கலையரசன்- பிரியாலயா நடிப்பு நன்றாக உள்ளது.

கதைக்களம் அருமை.

ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.

முதல் பாதி நன்றாக இருக்கிறது.

இன்றைய காலகட்டத்திற்கு சொல்ல வேண்டிய மெசேஜ்.

குறை:

இரண்டாம் பாதியில் படம் பொறுமையாக செல்கிறது.

கிளைமாக்ஸ் காட்சி செயற்கை தனமாக காண்பித்து இருக்கின்றார்.

ஆங்காங்கே, சில லாஜிக் குறைபாடுகள்.

படத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

மொத்தத்தில் ட்ரெண்டிங் படம் - முயற்சி.

behindtalkies AMP · Quick view
View full