விளையாடிக்கொண்டு இருக்கும் போதே இறந்த விஸ்வரூபம் பட பிரபலம் - கமல் முதல் ஸ்டாலின் வரை ஆழ்ந்த இரங்கல்.
கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் அஞ்சலி செலுத்தியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இசைக்கும், நாட்டியத்துக்கும் தன்னுடைய ஆயுளை அர்ப்பணித்த கலைஞர் பிர்ஜு மகாராஜ். இவர் கதக் நடனக் கலைஞர் ஆவார். அதோடு இவர் கதக் நடன கலைஞர்களின் மகாராஜ் குடும்பத்தின் வம்சாவளியை சேர்ந்தவர். நடனம் இவருடைய முதல் விருப்பம் என்றாலும் பாரம்பரிய இந்துஸ்தானி இசையை முறையாகப் பயின்றவர். அதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு பாடகராகவும் இருந்தார். சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
மேலும், இந்திய சினிமா உலகில் பல மொழி படங்களுக்கு நடனம் சொல்லித் தந்திருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு காலமானார். இவருக்கு தற்போது 83 வயதாகிறது. டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப் பிள்ளைகளுடன் நேற்று இரவு பிர்ஜு மகாராஜ் விளையாடிக் கொண்டிருந்தார். பின் திடீரென பிர்ஜு மகாராஜ் மயங்கி விழுந்துள்ளார். வீட்டிலுள்ள அனைவரும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தார்கள்.
பிர்ஜு மகாராஜ் காலமானார்:
அப்போது பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிசெய்தனர். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாகவே பிர்ஜு மகாராஜ் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கமலஹாசன் அவர்கள் பிர்ஜு மகாராஜ் மறைவிற்கு அஞ்சலி செய்துள்ளார். கமல்ஹாசன் இயக்கி நடித்து 2013 ஆம் ஆண்டு வெளிவந்த படம் விஸ்வரூபம். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் கமலஹாசன் 'உன்னை காணாது' என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.
விஸ்வரூபம் படம்:
இந்த பாடலுக்கு நடனம் பயிற்சி கொடுத்தவர் பிர்ஜு மகாராஜ். மேலும், இந்த பாடலுக்காக மட்டுமில்லாமல் சிறந்த நடன இயக்கத்துக்காக தேசிய விருதையும் பிர்ஜு மகாராஜ் பெற்றிருந்தார். இப்படி ஒரு நிலையில் பிர்ஜு மகாராஜின் மறைவிற்கு நடிகர் கமலஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஈடுஇணையற்ற நடன கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைந்தார்.
கமல்ஹாசன் டீவ்ட்:
ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிலிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’” என்று கூறியிருக்கிறார். இப்படி பதிவிட்ட கமலஹாசன் பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கமலஹாசன் மட்டுமில்லாமல் திரை உலகங்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்:
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், பழம்பெரும் கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் ஒரு சிறந்த கலையின் தூதராக இருந்தார். அவர் ஒரு வளமான பாரம்பரியத்தை விட்டு சென்றுள்ளார். அவரது மறைவு நாட்டுக்கும் கலைக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.