ஆரம்பத்தில் முழு பிஸ்கட்டை எடுத்தோம், ஆனால் இப்போ அரை பிஸ்கட் போதும் - கமல் ஹாசன் ஓபன் டாக்
தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக திகழ்பவர்கள் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்கள் இருவரும் நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இருவருக்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் என மக்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரையும் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது கே பாலசந்தர்தான். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரையும் வைத்து கே. பாலசந்தர் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
மேலும், சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். 1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இதை அடுத்து கமல்-ரஜினி சேர்ந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், கமலஹாசனும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வந்தது. ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது.
கமல்-ரஜினி குறித்த தகவல்:
அதற்குப் பிறகு தான் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமா கேரியில் கமலுக்கு இந்த படம் மூலம் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதற்குப் பிறகு லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் கூலி படம் வெளிவந்தது. இந்த படம் திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனைகளையும் செய்து கொண்டு வருகிறது.
லோகேஷ் படங்கள்:
இந்த நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கமல்- ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதாக கூறப்படுகிறது. அதுவும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தான் இருவருமே சேர்ந்து நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த படத்தையும் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் கமலஹாசன், இது தரமான சம்பவமா என்று தெரியாது. ஆனால், ரசிகர்களுக்கு பிடித்தால் நல்லது. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் பிடிக்கும். இல்லையென்றால் தொடர்ந்து முயற்சி செய்வோம்.
கமல் பேட்டி:
ஒரு நீண்ட காலமாக பலருமே இந்த விஷயத்தை தான் கேட்கிறார்கள். இருவருக்கும் ஒரே பிஸ்கட்டை கொடுத்தால் எங்களுக்கு பாதி பாதி தான் கிடைத்தது. அதனால் தான் நாங்கள் முழு பிஸ்கட்டாக பிரிந்தோம்.
முழு பிஸ்கட் ஆக பிரிந்து இப்போது அந்த அரை பிஸ்கட்டே போதும், இருவருக்கும் அதுவே சந்தோஷம் அளிக்கிறது. அதனால் இணைந்து வருகிறோம். எங்களுக்குள் போட்டி இருப்பதாக நீங்கள் தான் நினைத்திருக்கிறீர்கள், உருவாக்கினீர்கள். எங்களிடம் எந்த போட்டியும் கிடையாது. இந்த வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம்.
கமல்-ரஜினி படம்:
அப்போதே நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அப்படித்தான் அவர் இருக்கிறார், நானும் இருக்கிறேன். வியாபார ரீதியாக தான் இப்போது இணைகிறோமே தவிர எங்களுக்கு இது எப்போதோ நடக்க வேண்டியது, இப்போதாவது நடக்கிறதே நடக்கட்டும் என்பது போல தான் எங்களுக்கும் இருக்கிறது. நாங்கள் படத்தை ஒருவர் தயாரிக்க எப்போதும் விரும்பி இருக்கிறோம். ஆனால், இப்போது வேண்டாம் அப்போது வேண்டாம் என்று நாங்களே எங்களை தடுத்துக் கொண்டிருந்தோம் என்று கூறியிருக்கிறார்