கொட்டுவேன்முதன் முறையாக பிக் பாஸ் வாங்கும் சம்பளம் குறித்து பேசிய கமல்.

By Rajkumar · 3/11/2020

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல். நடிப்பையும் தாண்டி நடிகர் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமலுக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், கமல் மட்டும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து தொகுப்பாளராக இருந்து வருகிறார். அந்த அளவிற்கு பிக் பாஸ் மேடையை தவறவிடாமல் கெட்டியாக பிடித்து வருகிறார்.

பிக் பாஸ் மேடையை கமல் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக மட்டும் பாராமல். அதனை தனது அரசியல் பிரச்சாரத்திற்கு கிடைத்த ஒரு மேடையாகவே பயன்படுத்தி வருகிறார் என்பது பலரும் அறிந்த ஒன்று. இந்த பிக் பாஸ் மேடையில் பல அரசியல் காட்சிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பேசி இருக்கிறார் கமல். அவ்வளவு ஏன் கடந்த வாரம் பிக் பாஸ் மேடையில் போட்டியாளர்களை சந்தித்து பேசிய போது கமல் அணிந்திருந்த கோட்டில் மக்களின் கட்சியின் லோகோவை அணிந்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் கமல் பிக் பாஸில் வாங்கும் சம்பளம் குறித்து பேசி இருக்கிறார்.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் கமல், அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிட ஆயுத்தமாகி வருகிறார். இதனால் அடிக்கடி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களாக சென்னையில் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வரும் கமல், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார். அதே போல தன்னை வாழ வைத்த மக்களுக்கே தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், பிக்பாஸில் கோடிக்கணக்கில் வாங்குகிறேன்; இல்லை என்று சொல்லவில்லை; வேறு ஒன்றை சொன்னால் சக நடிகர்களை கிண்டலடிப்பதாக இருக்கும்; அவர்கள் சவுகரியமாக, ஆரோக்கியமாக, நன்றாக இருக்கட்டும்; என் வாழ்வாதாரம், என்னை வாழவைத்தவர்களிடமே கொட்டுவேன். என்று கூறியுள்ளார். கமலின் இந்த பேச்சு எந்த நடிகரை தாக்கி இருக்கிறது என்று சமூக வலைதளத்தில் ஒரு விவாதமே சென்று கொண்டு இருக்கிறது. அதில் பெரும்பாலானோர், கமலின் இந்த பேச்சு ரஜினியை தான் சுட்டிகாட்டி இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full