தி மு க கொள்கைக்கு பயந்து புனைபெயரில் கண்ணதாசன் எழுதிய பாடல் பற்றித் தெரியுமா ? இதோ விவரம்.

By subhashini · 30/7/2022

கொள்கைக்கு பயந்து புனைபெயரில் கண்ணதாசன் பாடல் எழுதி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருந்தவர் கண்ணதாசன். இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் என எழுதி இருக்கிறார். இவர் பல நாள்இதழ்களின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மேலும், தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். இவர் சாகித்திய அகாதமி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் கொள்கைக்கு பயந்து புனைபெயரில் கண்ணதாசன் பாடல் எழுதி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தமிழ் மன்னன் என்ற புனைபெயரில் கண்ணதாசன் பாடல் எழுதி இருந்த படம் தெனாலிராமன். விஜயநகர பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் மந்திரிசபையை அலங்கரித்த விகடகவி தெனாலிராமனின் கதைகள் எல்லோருக்கும் தெரிந்தது. குழந்தைகள் தங்களது வாசிப்பை தொடங்கிய உடன் தொனாலிராமன் கதைகள் பல உருவானது.

தெனாலிராமன் கதைகள்:

சினிமா பேசத் தொடங்கிய சில வருடங்களிலேயே 1938 லேயே தெனாலிராமன் கதைகளை திரைப்படமாக எடுத்தனர். அதன் பிறகு 1958 இல் சிவாஜி கணேசன் தெனாலிராமனாக நடிக்க தெனாலிராமன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது. மேலும், 40களில் கன்னட இயக்குநர் பி.எஸ்.ரங்கா புகழ்பெற்றவராக இருந்தார். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், ஒளிப்பதிவாளர் என பன்முகங்களை கொண்டு இருந்தார். இவர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வைத்து 18 படங்கள் இயக்கியிருக்கிறார்.

பி.எஸ்.ரங்கா :

கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கிலும் குறிப்பிடத்தகுந்த படங்கள் இயக்கி இருக்கிறார். பின் பி.எஸ்.ரங்கா தெனாலிராமன் கதையை படமாக்க விரும்பினார். ஆனால், அந்த நேரம் 1941 இல் தெலுங்கில் தெனாலிராமன் படம் வெளியானது. இந்த திரைப்படத்திதிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும் என பி.எஸ்.ரங்கா நினைத்தார். வெங்கடராமையா கன்னடத்தில் நடத்தி வந்த தெனாலி ராமகிருஷ்ணா நாடகத்தை தழுவி தனது திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார்.

படம் குறித்த தகவல்:

மேலும், திரைக்கதை எழுதும் பொறுப்பை கண்ணதாசன் உள்பட மூவரிடம் ஒப்படைத்தார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை எடுத்தார் பி.எஸ்.ரங்கா. தமிழில் தெனாலிராமனாக சிவாஜி கணேசன், தெலுங்கில் அக்னியேனி நாகேஸ்வரராவ் நடித்தார். கிருஷ்ணதேவராயராக இரு மொழிகளிலும் என்டி ராமராவ், ராஜகுருவாக தமிழில் நம்பியாரும், தெலுங்கில் முக்கமலா கிருஷ்ணமூர்த்தியும் நடித்தனர். நாயகிகளாக பானுமதி, ஜமுனா நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி படத்துக்கு இசையமைத்தனர்.

புனைபெயர் வைத்த கண்ணதாசன்:

சின்னது, பெரியது என 21 பாடல்கள் படத்தில் இடம்பெற்றது. இதில் பெரும்பாலான பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். அதில் ஆத்மநாதனின் இரு பாடல்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டன. இவர்களுடன் தமிழ் மன்னன் என்ற பாடலாசிரியரும் ஒரு பாடல் எழுதியிருந்தார். தமிழ் மன்னன் வேற யாரும் இல்லைங்க, கண்ணதாசன் தான். ஏன்னா, அப்போது அவர் திமுக வில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆத்திகம் பேசினால் தலைவர்களாக இருந்தாலும் விமர்சித்து வியர்வை வர வைத்துவிடுவார்கள்.

கொள்கைக்கு புனைப்பெயர் வைக்க காரணம்:

தெனாலிராமன் படத்தில், 'உல்லாசம் தேடும் எல்லோரும் ஒருநாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்..' என்ற பாடலை அவர் எழுதினார். அப்போது தி மு கவில் இருந்து கொண்டு ஆத்திகப் பாடல்ல தனது பெயரில் வந்தால் விமர்சிக்கப்படுவோம் என சொந்தப் பெயரை தவிர்த்து தமிழ் மன்னன் என்ற புனைப்பெயரில் அதனை எழுதினார். பிறகு அவர் திமுகவிலிருந்து விலகி பல கட்சிகள் சென்று, இறுதியில் ஆன்மிகத்தை நாடிச் சென்று நாத்திகத்தை விமர்சித்ததும் வரலாறு. ஆனால், ஆரம்பத்தில் கொள்கைக்கு பயந்து புனைப்பெயரில் கண்ணதாசன் பாடல் எழுதிய சம்பவமும் நடந்திருக்கிறது. பின் தெனாலிராமன் திரைப்படம் தெலுங்கில் தெனாலி ராமகிருஷ்ணா என்ற பெயரில், தமிழில் தெனாலிராமன் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full