எங்கு? எப்போது? இதில் தோற்றம் பற்றி பேசினேன்- அட்லீ குறித்த விமர்சனங்களுக்கு கபில் ஷர்மா பதிலடி

By subhashini · 21/12/2024

அட்லீயின் உருவ கேலி குறித்த சர்ச்சைக்கு தொகுப்பாளர் கபில் ஷர்மா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். இவர் முதலில் இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

அட்லீ குறித்த தகவல்:

கடைசியாக இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இதை அடுத்து இவர் தன்னுடைய அடுத்த படத்தின் வேலையில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

அட்லீ திரைப்பயணம்:

தற்போது இவர் தெறி படத்தினுடைய இந்தி ரீமேக்கை தயாரித்திருக்கிறார். பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியில் நடந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பேபி ஜான் படக்குழுவினருடன் அட்லீயும் கலந்து கொண்டிருந்தார்.

அட்லீ சொன்ன பதில்:

அப்போது தொகுப்பாளர், நீங்கள் பிரபல இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கிறீர்கள். பல பிரபலமான நடிகர்களுடன் பணியாற்றியும் இருக்கிறீர்கள். நீங்கள் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் உங்களை எப்படி பார்த்தார்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார். உடனே அட்லீ, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று எனக்கு புரிந்தது. என்னுடைய முதல் படத்தை ஏ.ஆர் முருகதாஸ் சார் தான் தயாரித்தார். அப்போது முருகதாஸ் சாரிடம் என்னுடைய கதையை கொடுத்தேன். அவருக்கு என்னுடைய கதை ரொம்ப பிடித்தது.

கபில் ஷர்மா பதிலடி:

அவர் என்னுடைய தோற்றத்தை பார்க்காமல் என்னுடைய இதயத்தை பார்த்தார் என்று பதிலடி கொடுத்திருந்தார். இப்படி இவர் பேசியிருந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை அடுத்து சோசியல் மீடியாவில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கபில் ஷர்மாவை மோசமாக திட்டி விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக கபில் சர்மா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அந்த நிகழ்ச்சியில் நான் எங்கு? எப்போது? அவருடைய தோற்றம் குறித்து பேசினேன் என்று விளக்கம் கொடுக்கிறீர்களா? தயவு செய்து சோசியல் மீடியாவில் வெறுப்பை பரப்பாதீர்கள். அந்த வீடியோவை பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆடு போல மற்றவருடைய ட்விட்டரை பின்பற்றாதீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full