தமிழ் கடவுள் முருக பெருமானை இழிவுபடுத்தும் விதத்தில் ‘கந்த சஷ்டி” பாடலை கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்ட யூடுயூப் சேனல் தான் தற்போது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப்  சேனலை விமர்சித்தும்,  அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். மேலும், கருப்பர் கூட்டம் யூடுயூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல இந்த சர்ச்சைக்கு பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ராஜ்கிரண் கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில்,ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, “கந்தர் சஷ்டி கவசம்” என்பது, “ஒரு பாதுகாப்பு அரண்”. இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன.

Advertisement

இறைவனை நம்பாதோர்க்கு, “நம்பாமை” என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, “நம்புதல்” என்பது, அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது.

இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதார சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில், யாருக்கோ, ஏதோ, உள்நோக்கம் இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க தனது விடீயோவிற்கு சமீபத்தில் கருப்பர் கூட்டம் மன்னிப்பும் கேட்டுள்ளது.

Advertisement

Advertisement
Advertisement