கவின்-ஆண்ட்ரியா காம்போவில் வந்த 'மாஸ்க்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்க். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். அதோடு இந்த படத்தையும் தயாரிப்பாளர் சொக்கலிங்கம் உடன் இணைந்து ஆண்ட்ரியா தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ கவின் டிடெக்டிவ் ஆக வேலை செய்கிறார். இவர் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து வைக்கிறார். அதோடு இவர் வாடிக்கையாளர்களிடம் மட்டுமில்லாமல் யார் தன்னிடம் சிக்கிக் கொள்கிறார்களோ அவர்களிடம் இருந்தும் பணத்தை பிடுங்கி விடுகிறார். காரணம், பணம் மட்டும்தான் உலகத்தின் உடைய ஒரே தேவை என்ற நோக்கத்துடன் வாழும் நபர் தான் ஹீரோ.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால், கணவன்- மனைவி இருவருமே பிரிந்து தான் வாழ்கிறார்கள்.
இந்த சூழலில் தான் ருஹானி ஷர்மா, ஹீரோ கவின் உடன் பேசி பழகுகிறார். ருஹானி ஷர்மாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. ஆனால், அவருக்கு அந்த திருமணத்தில் எந்த ஒரு விருப்பமும்
இல்லை என்பதால் தான் ஹீரோ கவின் உடன் நெருங்கி பழகுகிறார். இன்னொரு பக்கம் ஹீரோயினி ஆண்ட்ரியா பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை எதிர்த்துப் போராடி அவர்களை மீட்டு நல்வாழ்வு அமைத்து தரும் நபராக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களை படிக்கவும் வைக்கிறார்.
வெளி உலகில் இவருக்கு இப்படி ஒரு முகம் இருந்தாலும் இவருக்கு இன்னொரு முறை முகமும் இருக்கிறது. தன்னிடம் உள்ள பெண்களை வைத்து அரசியல்வாதிகளின் தேவைகளையும் இவர் பூர்த்தி செய்கிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொள்கிறார். பின் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதி பவன், ஆண்ட்ரியாவிடம் 440 கோடியை கொடுத்து தொகுதி முழுவதும் யாருக்கும் தெரியாமல் அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார். பணத்தை தன்னுடைய சூப்பர் மார்க்கெட்டில் ஆண்ட்ரியா பதுக்கி வைக்கிறார்.
அந்த சூப்பர் மார்க்கெட்டை எம்.ஆர் ராதா மாஸ்க் போட்டு கொண்டு ஒரு கும்பல் கொள்ளையடிக்கிறது. இது தெரியாமல் கொள்ளையடிக்கும் இடத்திற்கு கவின் வந்து விடுகிறார். கவின், ருஹானி ஷர்மா வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் தான் ருஹானி ஷர்மா உடைய கணவருமே வீட்டிற்கு வருகிறார். தன்னுடைய கணவருக்கு தெரியாமல் கவினை வீட்டை விட்டு அனுப்ப ருஹானி ஷர்மா முயற்சி செய்கிறார். வீட்டிற்கு வந்த ருஹானி ஷர்மா கணவரின் உடைய பேக்கில் எம்.ஆர் ராதா மாஸ்க் இருப்பதை கவின் பார்த்து விடுகிறார்.
அதோடு சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை அடித்தது இவன்தான் என்று அதிர்ச்சியிலும் கவின் உறைந்து போகிறார். அதற்குப் பின் என்ன நடந்தது? 440 கோடியை கொள்ளை அடிக்க என்ன காரணம்? கவின் தப்பித்தாரா? ருஹானி ஷர்மா மாட்டிக்கொண்டாரா? ஆண்ட்ரியாவின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை. முதல் படத்திலேயே இயக்குனர் விகர்ணன் அசோக் எடுத்துக் கொண்ட
கதைக்களம், கதாபாத்திரங்கள் உடைய வடிவமைப்பு என அனைத்துமே பட்டய கிளப்பி இருக்கிறது.
அதோடு கொள்ளை அடித்ததற்கான காரணத்தை இயக்குனர் சொல்லி இருக்கும் விதமும் சிறப்பாக இருக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சி எல்லாமே ரசிக்கும்படியாகவும் ஏற்றுக் கொள்ளும்படியாகவும் இயக்குனர் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஆனால், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம். சில இடங்களில் குழப்பத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலுமே இயக்குனர் விறுவிறுப்பாக கொண்டு செல்ல முயற்சித்து இருக்கிறார். கவின், ஆண்ட்ரியா நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. படத்தில் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுடைய வேலைகளை சரியாக செய்திருக்கிறார்கள்.
சுயநலமான மனிதர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு பாதிக்கப்படும் மிடில் கிளாஸ் எதிர்த்து அடிக்க தொடங்கினால் என்ன நடக்கும் என்பதை காட்டிய விதம் மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் வேற லெவல். ஜிவி பிரகாஷ் உடைய பின்னணி இசை நன்றாக இருக்கிறது.
ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் மாஸ்க் இருக்கிறது.
நிறை:
கதைக்களம் அருமை
கவின், ஆண்ட்ரியா நடிப்பு சூப்பர்
இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது
கிளைமாக்ஸ் வேற லெவல்
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்
குறை:
முதல் பாதி பொறுமை
சில இடங்களில் காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது
சில காட்சிகள் சலிப்படையை வைத்திருக்கிறது
மொத்தத்தில் மாஸ்க் - முகத்திற்கு பொருத்தமானது